வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியான பெருந்துறைப்பட்டு, பேராயம்பட்டு, குங்கிலியநத்தம், வாழவச்சனூர், சதாகுப்பம், சின்ன கல்லப்பாடி, பெரிய கல்லப்பாடி, தச்சம்பட்டு, தலையாம்பள்ளம், மேல்கச்சிராப்பட்டு, கீழ் கச்சிராப்பட்டு உள்ளிட்ட பகுதியில் விவசாயம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலும் கரும்பு பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக ஏரி, குளம், மற்றும் கிணறுகள் நிரம்பி வருகிறது. இதன் காரணமாக அதிகளவில் விவசாயிகள் நெல் பயிரிடுவதற்கு தயார் செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பயிரிடப்பட்ட நெற்பயிரில் அதிகளவில் வெள்ளை நோய் தாக்கப்பட்டுள்ளது. இதனால் மேல் பகுதி முழுவதும் வெள்ளை நிறமாக இருப்பதால் வளராமல் இருந்து வருகிறது.
சம்பா சாகுபடிக்கு ஏற்றவாறு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல் பயிரிடப்பட்டு அதனை பராமரித்து வருகிறோம். ஆனால் நெற்பயிரில் அதிகளவில் வெள்ளை நோய் தாக்கப்படுவதால் மேல்பகுதி சாம்பல் நிறமாக மாறி வருகிறது. இதனால் வளராமல் அப்படியே இருப்பது மட்டுமல்லாமல் நெற் கதிர்களும் வருவதுமில்லை.
பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து தற்போது மழை பெய்ததையடுத்து நெல் பயிரிடப்பட்டு பராமரித்து வரும் நிலையில் நோய் தாக்கப்பட்டு உள்ளதால் செலவு செய்த பணம் எடுக்க முடியுமா? என்ற கவலை உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு நெற்பயிரில் தாக்கியுள்ள வெள்ளை நோய்க்கான நிவாரண முறை என்ன என்றும் அதனை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆலோசனைகள் வழங்க வேண்டும்.