விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான மெர்சல் திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று ஹிட் அடித்தது. இந்தப் படத்தில் நடிகர் வடி வேலு, இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்தனர். பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான இந்தப் படத்தின் வசூல் ரூ.250 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சமீபத்தில் மெர்சல் படத்தின் சீன உரிமையை ஹெச்.ஜி.சி என்ற நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிறுவனம் மெர்சல் படத்தை மேன்டரின் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு விரைவில் வெளியிட உள்ளது.
இதனிடையே INTERNATIONAL ACHIEVEMENT RECOGNITION AWARDS என்கிற 2018 -ம் ஆண்டுக்கான ஐஏஆர்எ விருது பரிந்துரை பட்டியல்கள் கடந்த ஜூலை மாதம் 21 -ம் தேதி வெளியிடப்பட்டன. 2014 -ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த சர்வதேச விருது பரிந்துரைப் பட்டியல்களில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சர்வதேச நடிகர் ஆகிய இரு பிரிவுகளில் மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் இடம்பெற்றிருந்தார். இந்த பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்ற நடிகர்களுக்கு ரசிகர்கள் வாக்களிக்கலாம்.
இந்நிலையில் ஐஏஆர்ஏ விருதுப் பட்டியல்கள் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டன. அதில் ரசிகர்களின் வாக்குகளின் அடிப்படையில் சிறந்த சர்வதேச நடிகருக்கான ஐஏஆர்ஏ என்ற சர்வதேச விருதை மெர்சல் படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய் பெற்றுள்ளார். இதை விருது வழங்கும் குழுவினர் ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளனர்.