Seemaraja-in-tamil-new-cinema-review

0
1727

ராஜா பரம்பரையில் வந்த நெப்போலியன் ‘பைக்’கில் சென்று விவசாயத்தை கவனிக்கிறார். ஜாலியாக ஊர் சுற்றி வரும் அவரது மகன் சிவகார்த்திகேயனை மக்கள் சீமராஜா என்று அழைத்து ராஜகுடும்பத்துக்கான மரியாதையை அளிக்கிறார்கள்.

பக்கத்து ஊரான புளியம்பட்டியில் பெரும்புள்ளியாக இருக்கும் காத்தாடி கண்ணனுக்கு ராஜா குடும்பத்து மீது பகை. விவசாயிகளுக்கு சிங்கம்பட்டி சமஸ்தானம் கொடுத்த நிலத்தை எழுதி வாங்கி, அங்கு காற்றாலைகளை நிறுவ முயற்சிக்கிறார். இரண்டு ஊர்களுக்கு இடையேயான மோதலால் புளியம்பட்டி சந்தையை கோர்ட்டு முடிவிடுகிறது. சந்தைக்குள் சிவகார்த்திகேயன் அத்துமீறி நுழைந்து வியாபாரிகள் பயன்பாட்டுக்கு திறந்து விடுகிறார். அவருக்கும், காத்தாடி கண்ணனுக்கும் மோதல் ஏற்படுகிறது.

புளியம்பட்டியை சேர்ந்த சமந்தாவுடன், சிவகார்த்திகேயனுக்கு காதலும் உருவாகிறது. அந்த காதலுக்கு தடையாக நிற்கிறார், காத்தாடி கண்ணன். அவரது எதிர்ப்பை முறியடித்து காதலில் வென்று விவசாயிகள் நிலம் பறிபோகாமல், சிவகார்த்திகேயன் மீட்டு கொடுத்தாரா என்பது மீதி கதை.

சிவகார்த்திகேயன் சீமராஜா, கடம்பவேல் ராஜா என்று இரு வேடங்களில் வருகிறார். நகைச்சுவையிலும், சண்டை காட்சியிலும் இறங்கி விளையாடி இருக்கிறார். தனக்கு வணக்கம் சொல்பவர்களுக்கு பணம் கொடுப்பது, காணாமல் போன புறாக்களை மாறுவேடத்தில் தேடிப்போய் சமந்தா அழகில் மயங்குவது, பள்ளி விழாவுக்கு சென்று ஆசிரியையாக இருக்கும் சமந்தாவுடன் மோதலும் காதலுமாக சில்மிஷங்கள் செய்வது, வேறு ஒருவருக்கு கொடுக்க இருந்த நல்லாசிரியர் விருதை சமந்தாவுக்கு மாற்றி கொடுப்பது என்று ரசிக்க வைக்கிறார்.

கடம்பராஜாவாக மொகலாய படைகளுடன் வீரதீரமாக வாள்சண்டையிட்டு ஒரு பிடி மண்ணையும் இழக்காமல் தடுத்து, சதியால் வில்லை மார்பில் தாங்கி உயர்விடும் காட்சியில் அதிரடி நாயகனாக மனதில் பதிகிறார். சமந்தா அழகான காதலியாக வருகிறார். சில இடங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பயன்படுத்தி இருக்கிறார். அவரது சிலம்ப சண்டைகள் மனதை ஈர்க்கிறது. கீர்த்தி சுரேஷ் சிறிது நேரம் வந்தாலும் மகாராணியாக மனதில் நிற்கிறார். நெப்போலியன் ராஜாவாக கம்பீரம்.

சிம்ரன், லால் இருவரும் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்கள். சூரி நகைச்சுவையால் தியேட்டரை கலகலப்பாக வைத்து இருக்கிறார். படத்தின் நீளத்தை குறைத்து இருக்கலாம். காதல், காமெடி, அதிரடி கலந்து ஜனரஞ்சகமான படத்தை கொடுக்க முயற்சித்து அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார், டைரக்டர் பொன்ராம். இமான் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு, படத்தின் கூடுதல் அம்சம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here