திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்காலிக காய்கறி சந்தைகள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் மூடப்படுகிறது

0
3385
tvmalai news

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான பல்வேறு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளில் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், போலீசார், தூய்மை பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர்.

மேலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், மருந்துகள் உள்பட அனைத்தும் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் தற்காலிக சந்தைகள் மூடப்படுகிறது. இதற்கு மாற்றாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காய்கறி மற்றும் பழங்கள் வாகனம், தள்ளு வண்டிகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அரிசி, பருப்பு, எண்ணெய் என அனைத்து அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்படுகிறது. இதற்கு மாற்றாக அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தங்களது வாடிக்கையாளர்களின் வீடுகளில் நேரடியாக சென்று வினியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மருந்தகங்கள், பெட்ரோல் நிலையங்கள், வங்கி ஏ.டி.எம்.கள், எரிவாயு முகவர்கள், இறைச்சி கடைகள் ஏற்கனவே உள்ள நடைமுறைகளின் அடிப்படையில் தொடர்ந்து செயல்படும். கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக எடுக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை பொது மக்கள், வியாபாரிகள், வணிகர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here