பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை மகாதீபம் வருகிற 23–ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஏற்றப்படுகிறது. இதனையொட்டி தீப திருவிழா கடந்த 14–ந் தேதி கொடியேற்றத்துடன் நடந்து வருகிறது.
வருகிற 23–ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் பரணி தீபமும், மாலையில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. மகா தீபம் நகரின் மையப்பகுதியில் 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஏற்றப்பட உள்ளது. இதற்கு பயன்படுத்தப்படும் மகா தீப கொப்பரை சீரமைக்கும் பணி நிறைவடைந்து தயார் நிலையில் உள்ளது.
கார்த்திகை மகாதீபம் ஏற்ற ஒரு சில நாட்களே இருப்பதாலும் தேரோட்டமும் நாளை நடைபெற உள்ளதாலும் திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகிறது.
இந்நிலையில், கார்த்திகை தீப தேரோட்டத்தையொட்டி நாளையும் 22-ம் தேதி, மகாதீபத்தையொட்டி நவ.23ம் தேதியும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார்.