அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள், நமது சுதந்திர இந்தியாவின் 10வது பிரதம மந்திரி ஆவார். நான்கு தசாப்தங்களாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவர், 3 முறை பிரதம மந்திரி பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களவைக்கு 9 முறையும், மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், முன்னாள் ஜன சங்கம் அரசியல் கட்சியை (இன்றைய பாரதிய ஜனதா கட்சி) நிறுவினார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த அவர், பாரதிய ஜனதா கட்சியின் ஆணிவேரென்று அக்கட்சி உறுப்பினர்களால் அழைக்கப்படுகிறார். இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பத்ம விபூஷன்’ விருதை வென்ற அவர், ஒரு சிறந்த கவிஞரும் கூட. அவர், ‘ட்வென்டி-ஒன் போயம்ஸ்’, ‘க்யா கோயா க்யா பாயா: அடல் பிஹாரி வாஜ்பாய், வ்யக்தித்வா அவுர் கவிதம்’, ‘மேரி இக்யாவனா கவிதம்’, ‘ஸ்ரேஷ்ட கபிதா’, எனப் பல கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். ‘லோகமான்ய திலகர் விருது’, ‘சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருது’, ‘பாரத ரத்னா பண்டிட் கோவிந்த் வல்லப பந்த் விருது’ எனப் பல விருதுகளை வென்றுள்ள முன்னாள் பிரதம மந்திரியான அடல் பிஹாரி வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு மற்றும் அரசியலில் அவரது பங்களிப்பையும், அவர் ஆற்றிய சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: 25 டிசம்பர் 1924 (வயது 88)
பிறப்பிடம்: குவாலியர் (இப்போது மத்திய பிரதேசத்தில் உள்ளது), ஐக்கிய மாகாணங்கள், பிரிட்டிஷ் இந்தியா
பணி: அரசியல்வாதி, கவிஞர்
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
பிரிட்டிஷ் இந்தியாவின் கீழ் வரும் குவாலியர் (இப்போது மத்திய பிரதேசத்தில் உள்ளது) என்னும் இடத்தில், கிருஷ்ணா பிஹாரி வாஜ்பாய் மற்றும் கிருஷ்ணா தேவி தம்பதியருக்கு மகனாக ஒரு நடுத்தர வர்க்க பிராமண குடும்பத்தில், டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி, 1924 ஆம் ஆண்டில் பிறந்தார். அவரது தந்தை ஒரு கவிஞர் மற்றும் பள்ளி ஆசிரியர் ஆவார்.
ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்
குவாலியரில் இருக்கும் கோர்கியில் உள்ள சரஸ்வதி ஷிஷு மந்திரில் தனது பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்த பின்னர், குவாலியர் விக்டோரியா கல்லூரியில் (இப்போதைய லக்ஷ்மி பாய் கல்லூரி) சேர்ந்தார். ஆரம்பத்தில் இருந்து படிப்பில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்த அவர், தனது கல்லூரியில் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்தில் அதிகமதிப்பெண்கள் வித்தியாசத்தில் தேர்ச்சிப் பெற்று, இளங்கலைப் பட்டம் வென்றார். பிறகு, கான்பூரில் உள்ள டிஏவி கல்லூரியில் சேர்ந்த அவர், அரசியலில் முதுகலைப் (எம். ஏ) பட்டத்தையும் முதல் வகுப்பில் தேர்ச்சியுற்று பெற்றார்.
ஆரம்பகாலப் பணிகள்
தனது முதுகலைப் படிப்பை வெற்றிகரமாக முடித்த அவர், இந்துமத அமைப்பான ‘ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்’ன் ஒரு முழுநேர தொழிலாளியாக மாறினார். சட்டம் பயில வேண்டுமென்ற ஆர்வம் கொண்ட அவர், அதைத் தீவிரமாகப் பயின்றார். இந்திய சுதந்திரத்திற்காக மாபெரும் தலைவர்களும், புரட்சியாளர்களும் போராடிக் கொண்டிருந்ததால், அவர் சட்டப் படிப்பைப் பாதியிலே கைவிட்டு, ஒரு பத்திரிக்கையாளராக உருவெடுத்தார். பத்திரிக்கையாளராக மாறிய அவர், ‘ராஷ்ட்ர தர்மா’, ‘பஞ்ச்ஜன்யா’, ‘ஸ்வதேஷ்’ மற்றும் ‘வீர் அர்ஜுன்’ போன்ற நாளிதழ்களைத் திருத்தும் பணியில் ஈடுபட்டார். ஆர். எஸ். எஸ்-ன் முழு நேர ஊழியர்கள் போலவே, அவர் இறுதி வரை திருமணமாகாமலேயே ஒரு பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார்.
அரசியல் பிரவேசம்
‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில், தனது மூத்த சகோதரரான பிரேம் என்பவருடன் கைதாகி சிறை சென்ற அவர், 23 நாட்கள் கழித்து விடுதலையானார். ஆர். எஸ். எஸ். சின் ஒரு அமைப்பான ‘பாரதிய ஜன சங்’-ன் ஒரு பகுதியாக மாறிய அவர், அதன் தலைவரான ஷ்யாமா பிரசாத் முகர்ஜியுடன் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்ததன் பேரில், கைது செய்யப்பட்டார். சிறையிலே முகர்ஜி அவர்கள் மரணமடைந்ததால், அவர் 1957ல் பல்ராம்பூர் தொகுதியிலிருந்து
மக்களவைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பேச்சாற்றல் அப்போதைய பிரதமராக இருந்த நேருவையும், பிற சட்டமன்ற உறுப்பினர்களையும் கவர்ந்ததால், அவர் பலரின் நன்மதிப்பைப் பெற்றார். ஜன சங்கின் தலைவரான தீனதயாள் உபாத்யாய் அவர்கள் திடீரென மரணமடைந்ததால், ஜன சங்கின் தலைமைப் பொறுப்பு, வாஜ்பாயின் கைகளில் வந்தது. 1977ல், அவர் ஜன சங்கை, புதிதாய் உருவான அமைப்பான ஜனதா பார்டியுடன் இணைத்தார். அக்கட்சி, பொதுத் தேர்தலில் வெற்றிப் பெற்றதால், அவர் வெளியுறவுத் துறை அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார். மொரார்ஜி தேசாயின் ராஜினாமாவிற்குப் பின்னர், ஜனதா கட்சிக் கலைக்கப்பட்டதால், பாரதிய ஜன சங் மற்றும் ஆர். எஸ். எஸ். அமைப்பை இணைத்து, அவரது நீண்ட கால நண்பர்களான எல். கே. அத்வானி மற்றும் பைரோன் சிங் ஷெகாவத் ஆகியோருடன் இணைந்து ‘பாரதிய ஜனதா கட்சியை’ 1980ல் உருவாக்கினார். 1995ல் சட்டமன்றத் தேர்தலில், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் பி.ஜே.பி வெற்றிப் பெற்றதால், அரசியலில் அக்கட்சி முக்கியத்துவம் பெற்றது. மேலும், 1996ல் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் அக்கட்சி வெற்றிக் கோடியை நாட்டியது.
பிரதமராக வாஜ்பாய்
1996ல் நடந்த பொதுத் தேர்தலில், பி.ஜே.பி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததால், அப்போதைய பிரதமரான ஷங்கர் தயால் ஷர்மா அவர்கள், அவரைப் பிரதமராகப் பொறுப்பேற்க சொன்னார். இந்தியாவின் 11வது பிரதரமராகப் பதவியேற்ற அவர், மற்ற கட்சிகளின் ஆதரவு கிடைக்காததால், பதவியேற்ற 13 நாட்கள் கழித்து, பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.
ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, அக்கட்சிக் கலைக்கப்பட்டதால், மறுபடியும் தேர்தல் நடந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியை அமைக்கும் விதமாக, அவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 13 மாதங்கள் கழித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தனது ஆதரவைப் பின் வாங்கியதால், அடுத்தத் தேர்தல் நடக்கும் வரை அவர் பிரதமர் பதவியில் இருந்தார். இதற்கிடையில், காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதமாக, இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே சுமூகமான முடிவை அமலாக்க புதிய சமாதான முன்னெடுப்புகளை வரைந்தார். 1999 ஆம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தானுக்கிடையே நடந்த ‘கார்கில்’ போரில் இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் விஜய்’ என்ற செயல்பாட்டை செயல்படுத்தி, பாகிஸ்தான் ராணுவத்திற்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதால், அப்போதைய பாகிஸ்தான் பிரதமரான நவாஸ் ஷெரிப் போரை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டார். கார்கில் போரில் வெற்றிப் பெற்றது, அவர்களின் தலைமையை மிகவும் தைரியமான மற்றும் வலுவானத் தலைமை என்று நாடு முழுவதும் போற்றச்செய்தது. இந்த வெற்றியை நினைவில் நிறுத்தும்படியாக, ஜூலை மாதம் 26 ஆம் தேதி, 2012 ஆம் ஆண்டில், ‘கார்கில் விஜய் திவஸ்’ என நியமிக்கப்பட்ட அவருக்கு, பா.ஜ. க தலைவர் நிதின் கத்காரி அவர்கள், மும்பையில் ஒரு மெழுகு சிலையைத் திறந்து வைத்தார்.
கார்கில் போரில் மிகத் திறமையாக செயல்பட்டதால், 1999 ஆம் ஆண்டில், நடந்த பொதுத் தேர்தலில், பா. ஜ. க 303 இடங்களில் அதிக வாக்குகள் வெற்றிபெற்று, அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி, 1999 ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாகப் பிரதமர் பதவியை ஏற்கச் செய்தது. மூன்றாவது முறை அவர், பிரதமராகப் பதவியேற்ற பின்னர், காத்மண்டு மற்றும் டெல்லிக்கிடையே செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக் கடத்தல், 2001ல் பாராளுமன்றம் மீது தாக்குதல், 2௦௦2ல் குஜராத் வன்முறை, போன்ற பல பிரச்சனைகள் 2004ல் நடந்த பொதுத் தேர்தலில், பா. ஜ. க கட்சியைப் பெரும் தோல்வியை சந்திக்க செய்தது.
மூன்று முறை பிரதமர் பதவியில் இருந்த அவர், 2௦௦4ல் நடந்தத் தேர்தலில் தோல்வியுற்றதால், 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், அரசியலிலிருந்து தான் ஓய்வுப் பெறப் போவதாக அறிவித்தார்.
எழுத்தாளராக வாஜ்பாய்
அவர், தனது கல்லூரியில் இருந்தே ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்தில் ஆர்வமுடையவராக இருந்ததோடு மட்டுமல்லாமல், அதில் அதிகமதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப்பெற்றதால், அவருக்கு இலக்கியத்தின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது எனலாம். இதனால், அவர் ஒரு எழுத்தாளராக உருவெடுத்தார். தனது சுயசரிதையை எழுதியதோடு மட்டுமல்லாமல், ‘ட்வென்டி-ஒன் போயம்ஸ்’, ‘க்யா கோயா க்யா பாயா: அடல் பிஹாரி வாஜ்பாய், வ்யக்தித்வா அவுர் கவிதம்’, ‘மேரி இக்யாவனா கவிதம்’, ‘ஸ்ரேஷ்ட கபிதா’, எனப் பல கவிதைத் தொகுப்புகளை படைத்துள்ளார்.
விருதுகள்
- 1992 – இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம விபூஷன்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
- 1993 – கான்பூர் பல்கலைக்கழகத்தில் இருந்து ‘இலக்கியத்தில் டாக்டர் பட்டம்’ பெற்றார்.
- 1994 – ‘லோகமான்ய திலகர் விருது’
- 1994 – ‘சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருது’ வழங்கப்பட்டது.
- 1994 – ‘பாரத் ரத்னா பண்டிட் கோவிந்த் வல்லப பந்த் விருது’ பெற்றார்.