சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பயனடையும்

0
2232

தண்டராம்பட்டு தாலுகா சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன. இதனையடுத்து அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதல் – அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டார்.

சாத்தனூர் அணையின் உயரம் 119 அடி. அணையின் முழு கொள்ளளவு 7,321 மில்லியன் கன அடி. நேற்று காலை 8 மணி அளவில் சாத்தனூர் அணையின் நீர் மட்டம் 96.20 அடியாகவும், முழு கொள்ளளவு 3,222 மில்லியன் கன அடியாகவும் இருந்தது.

விவசாயிகளின் கோரிக்கையின் அடிப்படையில் நேற்று முதல் வருகிற மார்ச் மாதம் 3–ந் தேதி வரை 40 நாட்களுக்கு ஏரிகளுக்கு மட்டும் தொடர்ந்து பாசனத்திற்காக இடது புறக்கால்வாயில் விநாடிக்கு 150 கன அடி மற்றும் வலது புறக்கால்வாயில் விநாடிக்கு 200 கன அடி தண்ணீர் என மொத்தம் 350 கன அடி வீதம் தண்ணீரை மாவட்ட கலெக்டர் கந்தசாமி திறந்து வைத்தார். இதன் மூலம் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 10,043 ஏக்கர் விளை நிலங்கள் பயனடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் தி.மு.க. எம்.எல்.ஏ. மு.பெ.கிரி, மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, பயிற்சி கலெக்டர் மு.பிரதாப், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு மத்திய பெண்ணையாறு வடிநில கோட்ட செயற் பொறியாளர் ஜி.முரளிதரன், சாத்தனூர் அணை நீர் பகிர்மான முறைப்படுத்தும் உதவி செயற் பொறியாளர் அறிவழகன், உதவி பொறியாளர்கள் கே.செல்வராஜூ (சாத்தனூர் அணை), மதுசூதனன் (தென்முடியனூர்), பி.ராஜேஷ் (வாணாபுரம்), வட்டார வளர்ச்சி அலுவலர் மகாதேவன், பாசன சங்க தலைவர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here