மகளிர் உரிமைத்தொகை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கவுள்ள நிலையில், இந்த திட்டத்தில் பயன் பெறுகின்ற பயனாளிகளுக்கு பிரத்தியேக ஏ.டி.எம் கார்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலின் போது திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக குடும்பத்தலைவிகளுக்கு மாதாந்திர உதவி தொகை மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. இந்த திட்டத்திற்கு பெண்கள் பெரும் ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைவதற்கு முக்கியமான வாக்குறுதியாக அமைந்தது. இதனையடுத்து ஆட்சி பொறுப்பை ஏற்ற திமுக வாக்குறுதிகள் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்ற தொடங்கியது. குடும்பத்தலைவிகளிடம் எப்போது மகளிர் உரிமை தொகை திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற கேள்வி எழுந்தது. இந்த திட்டத்திற்காக தமிழக அரசு சார்பாக பல்வேறு ஆலோசனைகளை நடத்தியது.
1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு
யார.? யாருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கலாம் என்ற பல தரப்பினரிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. இதனையடுத்து தமிழக சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன் படி தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் 1 கோடி குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார். 2023-24ம் நிதியாண்டில் இந்த திட்டத்தை செயல்படுத்திட ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டது.
மேலும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான டோக்கன்கள் மற்றும் விண்ணப்பங்கள் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டன. மேலும், இந்த திட்டத்திற்காக தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 63 லட்சம் குடும்ப தலைவிகள் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்த திட்டத்தின் பயனாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஏ.டி.எம்.கார்டுகள் தயார்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்க உள்ளார். இதில் முன்னதாக பெண்கள் கொடுத்த வங்கி கணக்கில் ஒரு ரூபாய் அனுப்பி சோதனையும் செய்யப்பட்டது. இதனையடுத்து மகளிர் உரிமை தொகை திட்டத்தில் தேர்வாகியுள்ள பயனாளிகளுக்கு வழங்க ஏ.டி.எம்.கார்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த கார்டுகளில் அரசு முத்திரை, திட்டத்தின் பெயர், வங்கி பெயர், பயனாளிகள் பெயர், செல்லுபடியாகும் தேதி, ஆண்டு ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஏடிஎம் கார்டுகள் தமிழகம் முழுவதும் பயனாளிகளுக்கு விரைவில் வழங்க பட உள்ளது