காமன்வெல்த் போட்டி: 11வது தங்க பதக்கத்தினை வென்றது இந்தியா; தொடர்ந்து 3வது இடத்தில் நீடிப்பு

0
2530

21வது காமன்வெல்த் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ்ட் நகரில் தொடங்கி நடந்து வருகிறது.

இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான், ஜமைக்கா, நைஜீரியா, கனடா, ஸ்காட்லாந்து, தென்ஆப்பிரிக்கா, மலேசியா, இலங்கை உள்பட 71 நாடுகளை சேர்ந்த சுமார் 4,500 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

காமன்வெல்த் போட்டியின் பதக்க பட்டியலில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகள் முறையே முதல் 2 இரண்டு இடங்களில் உள்ளன. ஆஸ்திரேலியா 38 தங்கம், 31 வெள்ளி மற்றும் 31 வெண்கலம் ஆகியவற்றுடன் மொத்தம் 100 பதக்கங்களை பெற்றுள்ளது. இதேபோன்று இங்கிலாந்து 22 தங்கம், 23 வெள்ளி மற்றும் 15 வெண்கலம் ஆகியவற்றுடன் மொத்தம் 60 பதக்கங்களை வென்றுள்ளது.

இந்தியா 10 தங்கம், 4 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் ஆகியவற்றுடன் மொத்தம் 19 பதக்கங்களை வென்று நேற்று 3வது இடத்தில் இருந்தது.

இந்த நிலையில், 6வது நாளான இன்று மகளிர் பிரிவின் 25 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ஹீனா சித்து தங்க பதக்கம் வென்றுள்ளார். இது இந்தியாவுக்கு கிடைத்த 11வது தங்க பதக்கம் ஆகும்.

இந்தியா பதக்க பட்டியலில் தொடர்ந்து 3வது இடத்தில் நீடிக்கிறது. அதற்கு அடுத்த நிலையில், கனடா, நியூசிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், தென்னாப்பிரிக்கா, சைப்ரஸ் மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களில் இடம் பிடித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here