சென்னை அணியின் வெற்றியை தொடர்ந்து பிற அணிகளின் நிலை என்ன?

0
1180

அபுதாபி,

துபாயில் நடைபெற்று வரும் 13வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய 49வது ஆட்டத்தில் கொல்கத்தாவை எதிர்கொண்ட சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் கொல்கத்தா அணியின் ப்ளே-ஆஃப் கனவு தகர்ந்துள்ளது என்று கூறலாம்.

ஏனெனில் 4வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணி 12 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகள் பெற்றுள்ளது. அதே சமயம் 5வது இடத்தில் உள்ள கொல்கத்தா அணி 13 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகள் பெற்றுள்ளது. இனி கொல்கத்தா ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் அடுத்து வரும் கடைசி போட்டியில் ஜெயித்தால் மட்டும் போதாது, பஞ்சாப் அணி 2 போட்டிகளிலும் தோற்றாக வேண்டும்.

அதே போல் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் முதல் அணியாக ப்ளே-ஆஃப் தகுதி பெற்று விடலாம் என்ற நிலையில் இருந்த பெங்களூரு அணியை முந்தையை போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அதன் கனவையும் சென்னை அணி தகர்த்தது. சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் ஒருவேளை கொல்கத்தா அணி வெற்றி பெற்றிருந்தால் புள்ளி பட்டியலில் 4வது இடத்தை கைப்பற்றியிருக்கும். எனவே சென்னையின் இந்த வெற்றி பஞ்சாப் அணிக்கு ஓரளவு மகிழ்ச்சியை கொடுத்திருக்கும்.

அதே நேரம் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் கடைசி போட்டியில் மோதிக்கொள்ள உள்ளன. தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் சென்னை அணி போகிற போக்கில் தங்கள் அணியையும் வீழ்த்திவிட்டுச் சென்று விடலாம் என்ற அச்சம் பஞ்சாப் அணிக்கும் ஏற்பட்டிருக்கும்.

ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகள் 12 போட்டிகளில் விளையாடி உள்ளன. அடுத்து வரும் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறும் பட்சத்தில் இரண்டு அணிகளுக்கும் ப்ளே-ஆஃப் வாய்ப்பு உள்ளது. எனவே தற்போதைய நிலவரப்படி ஏற்கனவே ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்ட மும்பை அணியையும், ப்ளே-ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்ட சென்னை அணியையும் தவிர மற்ற அனைத்து அணிகளும் 4வது இடத்திற்கான போட்டியில் உள்ளன.

மொத்தத்தில் ப்ளே-ஆஃப் வாய்ப்பை இழந்தாலும் கூட, சென்னை அணி தனது தீடீர் வெற்றிகளால் மும்பையை தவிர அனைத்து அணிகளின் தூக்கத்தையும் கெடுத்துள்ளது என்றே கூறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here