அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா: பக்தர்கள் வெள்ளத்தில் 5 தேர்கள் பவனி

0
6608
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். ஒரே நாளில் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தவாறு 5 தேர்கள் பவனி வந்தன.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. தினமும் காலையில் விநாயகரும், சந்திரசேகரரும் வீதி உலா வருகின்றனர். இரவு பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடந்து வருகிறது. விழாவையொட்டி நேற்று முன்தினம் 63 நாயன்மார்களை மாணவர்கள் தோளில் சுமந்து ஊர்வலமாக வந்தது பரவசத்தை ஏற்படுத்தியது. அன்று இரவு வெள்ளித்தேரோட்டம் நடந்தது. வெள்ளி தேரில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரரும், வெள்ளி இந்திர வாகனத்தில் பராசக்தி அம்மனும், வெள்ளி விமானங்களில் விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் எனபஞ்சமூர்த்திகள் வீதிஉலா வந்தனர்.

இந்த நிலையில் திருவிழாவின் 7-ம் நாளான நேற்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தையொட்டி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை சமேத அண்ணாமலையார், பராசக்தி, சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. அதனை தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க பஞ்சமூர்த்திகள் தேரில் எழுந்தருளினர். முன்னதாக தேர்களும் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.

தேரோட்டத்தை முன்னிட்டு தேரை வடம்பிடித்து இழுப்பதற்காக அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். அதனால் கோவில் மாடவீதியில் எங்கு பார்த்தாலும் பக்தர்களாகவே காட்சியளித்தனர். முதலாவதாக காலை 6.25 மணிக்கு விநாயகர் தேரோட்டம் தொடங்கியது. தேரை பக்தர்கள் பரவசத்துடன் வடம்பிடித்து இழுத்தனர். மாடவீதியை சுற்றி வந்த அந்த தேர் 9.15 மணிக்கு நிலையை அடைந்தது.

அதைத்தொடர்ந்து 9.35 மணிக்கு முருகர் தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி ஆகியோர் வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். அப்போது முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன், நகர செயலாளர் செல்வம் திருவண்ணாமலை உதவிக் கலெக்டர் உமாமகேஸ்வரி, கோவில் இணை ஆணையர் ஜெகன்னாதன் மற்றும் பலர் உடனிருந்தனர். பக்தர்கள் பக்தி கோஷங்களுடன் தேரை வடம்பிடித்து இழுத்து வந்தனர். பகல் 1.30 மணியளவில் முருகர் தேர் நிலைக்கு வந்தது.

அதன் பின்னர் அண்ணாமலையார் எழுந்தருளிய பெரிய தேர் வடம்பிடித்து இழுப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கின. தேரோட்டத்தை முன்னிட்டு வடக்கு மண்டல ஐ.ஜி. ஸ்ரீதரன் தலைமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தேரை சுற்றிலும் நுற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பெண்கள் ஒருபுறமும், ஆண்கள் மறுபுறமும் தேர் இழுப்பதற்காக அணிவகுத்து நின்றனர்.

பகல் 2.15 மணிக்கு சிறப்பு பூஜைக்கு பின்னர் அண்ணாமலையார் தேரோட்டம் தொடங்கியது. தொடர்ந்து ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்ற பக்தி கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேரோட்டத்தை முன்னிட்டு மாடவீதி முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. இதனால் மாடவீதிகள் நிரம்பி வழிந்தன. பக்தர்கள் வெள்ளத்தில் தேர் ஆடி அசைந்து வலம் வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. தேர் வலம் வந்தபோது சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. அதனையும் பொருட்படுத்தாமல் தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து வந்தனர்.

பெரிய தேர் நிலைக்கு வந்ததும் பராசக்தி அம்மன் தேர் இழுக்கப்பட்டது. இந்த தேரை பெண்கள் மட்டும் இழுத்தனர். அதைத் தொடர்ந்து சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்பட்டது.

முன்னதாக நேற்று ஏராளமான பக்தர்கள் கரும்பு தொட்டில் அமைத்து அதில் குழந்தைகளை வைத்து மாட வீதியில் வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

கார்த்திகைதீப திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு கிராமங்களில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து குவிந்தனர். இதனால் திருவண்ணாமலையில் உள்ள மடங்கள், சத்திரங்கள், தங்கும் விடுதிகள் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி உள்ளது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 2-ந் தேதி (சனிக்கிழமை) மகாதீபம் ஏற்றப்படுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படுகிறது. மகாதீபத்தை காண 20 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here