மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இளையராஜா சாமி தரிசனம்… ஒத்தக்கடை பகுதியில் இசை நிகழ்ச்சி!
உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இசைஞானி இளையராஜா சாமி தரிசனம் செய்தார்.
தமிழில் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா தனது 80வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு அவரது இசை நிகழ்ச்சியானது சென்னை மற்றும் கோவையில் நடைபெற்ற நிலையில் இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து மதுரையில் நாளை இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சிக்காக மதுரை வந்துள்ள இசைஞானி இளையராஜா, இன்று அதிகாலை 6 மணியளவில் மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இசையென்றால் இளையராஜா எனும் நிகழ்ச்சி நாளை ஒத்தக்கடை பகுதியில் நடைபெற உள்ள நிலையில், இன்று இளையராஜா மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் தெற்கு கோபுர வாசல் வழியாக கோவிலுக்குள் சென்ற இளையராஜா பக்தர்களோடு பக்தராக நின்று சாமி தரிசனம் செய்தார். சுவாமி மற்றும் அம்மன் சன்னதி, கால பைரவர் சன்னதி என மொத்தமாக 45 நிமிடங்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
தமிழ் வருட பிறப்பு, ஆங்கில வருடப்பிறப்பு, பௌர்ணமி உள்ளிட்ட முக்கிய நாட்களில் மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதை இளையராஜா வழக்கமாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.