Home Technology all-you-need-to-know-about-environmental-impact-assessment-2020-in-tamil
- EIA என்றால் என்ன?
ஒரு தொழிற்சாலையோ, நிறுவனமோ, சுரங்கமோ அணையோ மற்றும் இன்னபிற எந்த தொழில்முறைக் கட்டுமானங்களும் நிகழும்போது, அதன் சுற்றுப்புறத்தில் என்ன மாதிரியான தாக்கங்கள் நிகழும் என்பதைப் பொறுத்து அனுமதி வழங்கப்படும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய சட்டம் சூழலியல் தாக்க மதிப்பீடு என்று அழைக்கப்படுகிறது. புதிய தொழிற்சாலைகளால் ஒரு நாட்டின் வளம் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் இந்தச் சட்டம் விதிகளை வரையறுக்கிறது.
- சூழலியல் தாக்க மதிப்பீடு 2020 என்றால் என்ன?
1994ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது. இதில் கால மாற்றத்துக்கு ஏற்ப மேலும் திருத்தங்கள் செய்யப்பட்டு வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில் 2020ஆம் ஆண்டுக்கான புதிய வரவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு சூழலியல் தாக்க மதிப்பீடு 2006 நடைமுறையில் இருந்து வந்தது.
- EIA 2020 எப்போது வெளியிடப்பட்டது?
கொரோனா பரவல் உலகம் முழுக்க அதிகரித்து வந்த மாதமான மார்ச் மாதம் 12 ஆம் தேதி மத்திய சுற்றுச்சூழல் துறையினரால் வெளியிடப்பட்டது. ஜூன் 30 ஆம் தேதி வரை, மக்கள் கருத்துக்கான கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
- இதன் வரையெல்லை என்ன?
இந்தியா முழுக்க இந்த சூழலியல் தாக்க மதிப்பீடுதான் பின்பற்றப்படும். இந்தியாவின் ஆட்சிப் பகுதிக்குட்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அனைத்துக்கும் இந்த வரைவு பொருந்தும். இந்தியாவின் எந்தப் பகுதியிலும் புதிதாக ஆலையோ, அணையோ, சுரங்கமோ, நெடுஞ்சாலையோ அமைக்கும் முன்பு, இந்த மதிப்பீட்டு வழிமுறைகள் பின்பற்றப்பட்டு உரிய அனுமதி பெற வேண்டும்.
- EIA 2020 ஏன் எதிர்க்கப்படுகிறது?
ஒவ்வொரு சூழலியல் தாக்க மதிப்பீட்டுக்கும் பிரதான நோக்கம் சூழலியல் பாதுகாப்புதான். ஆனால், 2020ஆம் ஆண்டுக்காக சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு, முதலீட்டுக்கும் தொழில் வளர்ச்சிக்கும் முன்னுரிமை அளிப்பதாக சூழலியல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தொழிற்சாலைகளுக்கான அனுமதியை இரண்டு விதமாகப் பிரித்து வழங்கும் தற்போதைய வரைவில், எந்த விதமான நிபுணர் குழுவின் ஆய்வும் இன்றி அனுமதி வழங்குவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாகவும், சதுப்பு நிலங்களை கண்டுகொள்ளாத வகையிலும் இருப்பதால் இந்த சூழலியல் தாக்க மதிப்பீடு 2020 எதிர்க்கப்படுகிறது.
- ஆகஸ்ட் 11க்குப் பிறகு என்ன நடக்கும்?
ஆகஸ்ட் 11ஆம் தேதியுடன் மக்கள் கருத்துக்கான காலம் முடிவடையும் பட்சத்தில், அதுவரை அமைச்சகத்துக்கு வந்துசேர்ந்த கருத்துகளின் அடிப்படையில், வரைவில் மாற்றங்கள் செய்யப்பட்டு சட்டமாக நிறிவேற்றப்படும். பின் அரசிதழில் வெளியிடப்பட்டு அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும்.