விப்ரோ நிறுவனம் தனது 452 புதிய ஊழியர்களை அவர்களின் செயல்பாடு மிக மோசமாக இருப்பதாக கூறி பணிநீக்கம் செய்துள்ளது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு குறிப்பிட்ட காலம் பயிற்சிகள் கொடுத்து சோதித்து பார்த்ததில் வேலையில் அவர்களின் செயல்பாடு விப்ரோவின் தரத்திற்கு ஏற்றவாறு இல்லை என்று பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் விப்ரோவில் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட ஊழியர்கள் விப்ரோவின் NLTH என்று சொல்லக்கூடிய நேஷனல் லெவல் டேலண்ட் ஹண்ட் என்ற ப்ரோக்ராம் மூலம் ஆன்லைன் வழியாக தேர்வு செய்யப்பட்டவர்கள். 128 நிமிட ஆன்லைன் தேர்வு மூலம் இவர்களின் திறமைகள் பரிசோதிக்கப்பட்டு பணிக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்
இந்த நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்ட 452 ஊழியர்களும் பயிற்சி காலம் முடிந்த பிறகும் வேலையில் போதுமான அளவு தகுதி படைத்தவர்களாக இல்லை என்று விப்ரோ கூறியுள்ளது. அதே போல், இந்த பணிநீக்கம் குறித்து விப்ரோ தரப்பிலிருந்து கூறும்போது,இந்த துறையில் முன்னணியில் இருப்பதில் எங்களுக்கு பெருமை.
இந்த நிலையை பாதுகாக்க மற்றும் தரமான நிறுவனமாக இருக்க எங்கள் நிறுவனத்தில் இணையும் புது ஊழியர்களும் அவரவர் துறையில் சிறப்பானவராக இருக்க வேண்டியது மிக அவசியம்.அந்த வகையில் பயிற்சி முடித்த புதிய ஊழியர்களை சோதித்து பார்த்ததில் இந்த 452 பேரும் நிறுவனம் எதிர்பார்க்கும் தகுதிகளுக்கு தேர்ச்சி பெறாததால் பணிநீக்கம் செய்துள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது.