திருவண்ணாமலை,
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 5-வது நாளாக நேற்றும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்திலும் இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை விடுமுறை நாட்கள் முடிந்து வேலைக்கு, பள்ளிக்கு செல்வோர் அந்தந்த பகுதியில் உள்ள பஸ் நிலையங்கள் மற்றும் பஸ் நிறுத்தங்களில் காத்திருந்தனர். போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தினால் பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்பட வில்லை. கிராமப்புற பகுதிகள் வழியாக சென்ற தனியார் பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
சரியான நேரத்தில் அலுவலகத்திற்கும், பள்ளிக்கும் செல்ல பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர். பின்னர் அந்த வழியாக வரும் தனியார் பஸ்களில் கூட்டம் அதிகம் இருந்தாலும், என்ன செய்வது என்று அதில் ஏறி பயணம் செய்தனர். சில பகுதியில் தனியார் பஸ்கள் படிக்கட்டிலும் நிற்கமுடியாத அளவிற்கு மாணவர்கள் மற்றும் வாலிபர்கள் தொங்கியபடி பயணம் செய்தனர்.
போக்குவரத்து கழகம் சார்பில் அரசு பஸ்களை இயக்க தற்காலிக டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களை நியமித்துள்ளனர். அவர்கள் மூலம் பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. தற்காலிக டிரைவர்கள் இயக்கும் பெரும்பாலான பஸ்களில் பயணிகளின் கூட்டம் குறைவாக தான் இருந்தது.
திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் நேற்று பகலில் பயணிகளின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. சென்னை, வேலூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு செல்ல போக்குவரத்து துறை சார்பில் தொடர்ந்து பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் சேலம், தர்மபுரி, கோவை, மதுரை, பெங்களூரு போன்ற பகுதிகளுக்கு பெரும்பாலான பஸ்கள் இயக்கப்பட வில்லை.
இதுகுறித்து திருவண்ணாமலை போக்குவரத்து மண்டல பொது மேலாளர் நடராஜன் கூறுகையில், ‘திருவண்ணாமலை போக்குவரத்து மண்டலத்தில் இருந்து 520 பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் 84 சதவீதம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு குறைந்தது சுமார் 2 லட்சத்து 95 ஆயிரம் மக்கள் பயணிப்பார்கள். தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தினால் அரசு பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை தற்போது குறைந்து உள்ளது. நேற்று முன்தினம் கணக்கின் படி சுமார் 1 லட்சம் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளது’ என்றார்.
தொழிலாளர் முன்னேற்றம் சங்கம் சார்பில் சவுந்தரராஜன் தலைமையில் போக்குவரத்து ஊழியர்கள் திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தில் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., மின்சார வாரிய ஊழியர்கள் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தனியார் பஸ்களில் அளவுக்கு அதிகமாக பயணிகள் ஏற்றிச் செல்வதால் கண்ணமங்கலத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
குறிப்பாக கண்ணமங்கலம், கூட்ரோடு மற்றும் கொங்கராம்பட்டு சித்திரசாவடி ஆகிய 3 பஸ் நிறுத்தங்களிலும் நேற்று விடுமுறை முடிந்து பணிக்கு செல்பவர்கள், வேலூர் மற்றும் ஆரணி சென்று படிக்கும் மாணவ, மாணவிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். அரசு பஸ்கள் வராததால் பயணிகள் தனியார் பஸ்களிலும், ஆட்டோக்களிலும் சென்றனர். சில தனியார் பஸ்கள் மற்றும் ஆட்டோக்களில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் தெரிவித்தனர்.
எனவே அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை உடனடியாக கைவிடவும், அதற்கான வழிமுறைகளை அரசு விரைந்து எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.