விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட தாமரை குளத்தை தூய்மை செய்யும் பணி – கலெக்டர் தலைமையில் நடந்தது

0
2681

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 13-ந் தேதி கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி பல்வேறு அமைப்புகள், இளைஞர்கள் சார்பில் முக்கிய பகுதியில் விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். நேற்று முன்தினம் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, அந்தந்த பகுதியில் உள்ள நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன. அதன்படி, திருவண்ணாமலையில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தாமரை குளத்தில் கரைக்கப்பட்டது. இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

இந்த நிலையில் நேற்று காலை தாமரை குளத்தில் கரையாத விநாயகர் சிலைகள் மற்றும் பூக்கள் போன்றவற்றை அகற்றி தூய்மை செய்யும் பணி நடைபெற்றது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். இதில் உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார், நகராட்சி ஆணையர் பாரிஜாதம் மற்றும் அரசு அலுவலர்கள், தீயணைப்பு வீரர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படையை சேர்ந்த மாணவர்கள், தூய்மை அருணை திட்டத்தினர் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் தாமரை குளத்தில் இறங்கி அதில் கிடந்த கழிவு பொருட்களான பூ மாலை, எலுமிச்சை மாலை போன்றவற்றையும், தேவையற்ற கம்புகளையும், தண்ணீரில் கரையாத விநாயகர் சிலைகளையும் அகற்றினர். மேலும் முழுமையாக அப்படியே கிடந்த விநாயகர் சிலைகள் கிரேன் மூலம் குளத்தில் இருந்து தூக்கி அகற்றப்பட்டன.

இதுகுறித்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 1500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன. இவை இன்று (திங்கட்கிழமை) வரை கரைக்கப்படுகின்றன. ரசாயன கலவையால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் பயன்படுத்த கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இருப்பினும் சிலர் அந்த ரசாயன கலவையால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பயன்படுத்தினர்.

இந்த ரசாயன கலவையால் செய்யப்பட்ட 500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு ரசாயன கலவையால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கும் போது சரியாக கரையாது. அதனால் அவை நீர்நிலைகளில் இருந்து அகற்றப்படுகின்றன’ என்றார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here