ராமேஸ்வரம்: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 2வது நினைவு தினமான நாளை நினைவு மணிமண்டபம் திறக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் 5 கோடி மாணவர்கள் ‘கலாம் சலாம்’ பாடலை பிரதமர் மோடியுடன் சேர்ந்து பாடி வணக்கம் செலுத்த உள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கடந்த 2015ம் ஆண்டு, மேகாலயா மாநிலத்திற்குச் சென்றிருந்தபோது மரணம் அடைந்தார். அவரது உடல் சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
அவரது நினைவைப் போற்றும் வகையில், ரூ.50 கோடி செலவில் மணிமண்டபமும், அறிவு சார்மையமும் ராமேஸ்வரம் பேக்கரும்பில் கட்டும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளன. அந்த நினைவு மண்டபத்தை, பிரதமர் மோடி நாளைத் திறந்து வைக்க உள்ளார்.
5 கோடி மாணவர்களின் ஒரே குரலில் ‘கலாம் சலாம்’
‘கலாம் பாடல்’ பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 5 கோடி மாணவர்கள் பாட உள்ளனர். அவர்களோடு சேர்ந்து பிரதமர் மோடியும் பாட உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் சிறப்புற செய்யப்பட்டுள்ளது. 3 நிமிடங்கள் கொண்ட இந்தப் பாடலை 11 மணிக்கு நினைவு மண்டபம் திறந்த உடன் பாடப்படும்.
தெலுங்கு இந்தியிலும் ‘கலாம் சலாம்’
தமிழ்நாட்டில் உள்ள மாணவ, மாணவிகள் தமிழில் ‘கலாம் சலாம்’ பாடலைப் பாடுவார்கள். ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தெலுங்கிலும், மற்ற மாநில மாணவர்கள் இந்தியிலும் இந்தப் பாடலை பாட உள்ளனர்.
வைரமுத்து எழுதிய பாடல்
“கலாம் சலாம்” என்ற இந்தப் பாடல் கவிஞர் வைரமுத்து எழுதி, சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். அண்மையில், இந்தப் பாடல் சென்னையில் வெளியிடப்பட்டது.
பலத்தப் பாதுகாப்பு
இந்த விழாவில் முதல்வர் பழனிச்சாமி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், எம்பிக்கள் வெங்கய்ய நாயுடு, அன்வர்ராஜா மற்றும் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் ராமேஸ்வரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.