மும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக சாம்பியன்

0
6430

ஐதராபாத், 
ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்சை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
ஐ.பி.எல். இறுதிப்போட்டி
12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் ஐதராபாத் ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நேற்று இரவு அரங்கேறிய மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், 3 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சும் பலப்பரீட்சை நடத்தின. மும்பை அணியில் ஒரு மாற்றமாக ஜெயந்த் யாதவ் நீக்கப்பட்டு மெக்லெனஹான் சேர்க்கப்பட்டார். சென்னை அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
‘டாஸ்’ ஜெயித்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டான் டி காக், ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரை தீபக் சாஹர் வீசினார். அந்த ஓவரில் 2 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தார். 2-வது ஓவரில் ஷர்துல் தாகூர் பந்து வீச்சில் ரோகித் சர்மா முதல் சிக்சரை தூக்கினார். 3-வது ஓவரில் தீபக் சாஹர் பந்து வீச்சில் குயின்டான் டி காக் 3 சிக்சர்கள் விளாசி அசத்தினார். 4-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் வீசினார். அந்த ஓவரில் ரோகித் சர்மா ஒரு பவுண்டரி விரட்டினார்.
குயின்டான் டி காக் 29 ரன்னில் அவுட்
5-வது ஓவரில் ஷர்துல் தாகூர் பந்து வீச்சில் சிக்சர் விளாசிய குயின்டான் டி காக் (29 ரன், 17 பந்து, 4 சிக்சர்) அவரது அடுத்த பந்திலேயே விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்த ஓவரில் கேப்டன் ரோகித் சர்மா (15 ரன், 14 பந்து ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) தீபக் சாஹர் பந்து வீச்சில் டோனியிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். தாழ்வாக வந்த பந்தை டோனி அருமையாக கேட்ச் செய்தார். இதைத்தொடர்ந்து இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்தார். பவர்பிளேயில் (முதல் 6 ஓவரில்) மும்பை அணி 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்தது.
முதல் 2 விக்கெட் வீழ்ந்ததும் மும்பை அணியின் ரன் வேகம் குறைந்தது. சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் நிதானமாக ஆடினார்கள். அணியின் ஸ்கோர் 11.2 ஓவர்களில் 82 ரன்னாக இருந்த போது சூர்யகுமார் யாதவ் (15 ரன்கள், 17 பந்து, ஒரு பவுண்டரி) இம்ரான் தாஹிர் பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்து வந்த குருணல் பாண்ட்யா (7 ரன்) ஷர்துல் தாகூர் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து விரைவில் நடையை கட்டினார். இதைத்தொடர்ந்து பொல்லார்ட் வந்தார். இம்ரான் தாஹிர் வீசிய ஓவரில் பொல்லார்ட் சிக்சர் விளாசினார். 14.1 ஓவர்களில் மும்பை அணி 100 ரன்னை எட்டியது. இஷான் கிஷன் 26 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 23 ரன் எடுத்த நிலையில் இம்ரான் தாஹிர் பந்து வீச்சில் சுரேஷ் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
ஹர்திக் பாண்ட்யா ஏமாற்றம்
இதனை அடுத்து ஹர்திக் பாண்ட்யா களம் இறங்கினார். 4 ரன்னில் இருக்கையில் ஹர்திக் பாண்ட்யா, ஷர்துல் தாகூர் பந்து வீச்சில் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பினார். இந்த நல்ல கேட்ச் வாய்ப்பை சுரேஷ் ரெய்னா நழுவ விட்டார். அந்த ஓவரில் பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா ஒரு சிக்சர் தூக்கினார்கள். ஆனால் இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. அடுத்த ஓவரில் ஹர்திக் பாண்ட்யா (16 ரன், 10 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) தீபக் சாஹர் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். நடுவரின் இந்த முடிவை எதிர்த்து ஹர்திக் பாண்ட்யா செய்த அப்பீல் தோல்வியில் முடிந்தது. அடுத்து வந்த ராகுல் சாஹர் (0) அதே ஓவரில் டுபிளிஸ்சிஸ்சிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
மும்பை 149 ரன்
அடுத்து மெக்லெனஹான் களம் இறங்கினார். கடைசி ஓவரில் வெய்ன் பிராவோ பந்து வீசினார். அந்த ஓவரில் வைடு கொடுக்கவில்லை என்று பொல்லார்ட் பேட்டை தூக்கி எறிந்ததுடன், அடுத்த பந்து வீச வரும் போது பேட்டிங் செய்யாமல் கிரீசை விட்டு நகர்ந்தார். இதைத்தொடர்ந்து நடுவர் பொல்லார்ட்டை எச்சரிக்கை செய்தார். அடுத்த பந்தில் மெக்லெனஹானை (0) வெய்ன் பிராவோ ரன்-அவுட் செய்தார். கடைசி 2 பந்துகளை பொல்லார்ட் பவுண்டரிக்கு விரட்டினார்.
20 ஓவர்களில் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. பொல்லார்ட் 25 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 41 ரன்னும், ஜஸ்பிரித் பும்ரா ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். சென்னை அணி தரப்பில் தீபக் சாஹர் 3 விக்கெட்டும், ஷர்துல் தாகூர், இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பாப் டுபிளிஸ்சிஸ் 26 ரன்
பின்னர் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பாப் டுபிளிஸ்சிஸ், ஷேன் வாட்சன் ஆகியோர் களம் கண்டனர். வேகமாக மட்டையை சுழற்றிய பாப் டுபிளிஸ்சிஸ் (26 ரன், 13 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) குருணல் பாண்ட்யா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு வெளியேறினார். அடுத்து சுரேஷ் ரெய்னா வந்தார். பவர்பிளேயில் சென்னை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் திரட்டியது.
அணியின் ஸ்கோர் 70 ரன்னாக இருந்த போது நிதானமாக ஆடிய சுரேஷ் ரெய்னா (8 ரன்) ராகுல் சாஹர் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த அம்பத்தி ராயுடு (1 ரன்) பும்ரா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார்.
ஷேன் வாட்சன் அபாரம்
இதைத்தொடர்ந்து கேப்டன் டோனி, ஷேன் வாட்சனுடன் இணைந்தார். ஷேன் வாட்சன் தொடர்ந்து நேர்த்தியாக ஆடினார். கேப்டன் டோனி (2 ரன்) இஷான் கிஷனால் ரன்-அவுட் செய்யப்பட்டு வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 12.4 ஓவர்களில் 82 ரன்னாக இருந்தது. அடுத்து வெய்ன் பிராவோ களம் கண்டார். 15.4 ஓவர்களில் சென்னை அணி 100 ரன்னை கடந்தது. 18-வது ஓவரில் குருணல் பாண்ட்யா பந்து வீச்சில் ஷேன் வாட்சன் தொடர்ச்சியாக 3 சிக்சர் விளாசி கலக்கினார். ஸ்கோர் 133 ரன்னாக உயர்ந்தபோது வெய்ன் பிராவோ (15 ரன், 15 பந்துகளில் ஒரு சிக்சருடன்) பும்ரா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
அடுத்து ரவீந்திர ஜடேஜா, ஷேன் வாட்சனுடன் ஜோடி சேர்ந்தார். கடைசி ஓவரில் சென்னை அணி வெற்றிக்கு 9 ரன் தேவைப்பட்டது. கடைசி ஓவரை மலிங்கா வீசினார். நிலைத்து நின்று ஆடிய ஷேன் வாட்சன் (80 ரன்கள், 59 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) 4-வது பந்தில் ரன்-அவுட் ஆனார். கடைசி பந்தில் 2 ரன் தேவை என்ற நிலையில் ஷர்துல் தாகூர் (2 ரன்) எல்.பி.டபிள்யூ. ஆனார்.
மும்பை அணி 4-வது முறையாக சாம்பியன்
20 ஓவர்களில் சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 148 ரன்களே எடுத்தது. இதனால் மும்பை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை 4-வது முறையாக கைப்பற்றி சாதனை படைத்தது. அந்த அணி 2013, 2015, 2017-ம் ஆண்டுகளிலும் கோப்பையை வென்று இருந்தது. இந்த சீசனில் சென்னை அணி இறுதிப்போட்டி உள்பட 4 ஆட்டங்களில் மும்பையிடம் வீழ்ந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here