திருவண்ணாமலை மாவட்டத்தில் 19 லட்சத்து 62 ஆயிரத்து 843 வாக்காளர்கள் உள்ளனர் -2018

0
5676

திருவண்ணாமலை,

தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் திருத்தப்பட்டியல் தயாரிக்கும் பணி நடந்தது. இறுதிப்பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி, வந்தவாசி (தனி), செய்யாறு, போளூர், கலசபாக்கம், செங்கம், கீழ்பென்னாத்தூர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. மாவட்டத்தில் 2018-ம் ஆண்டிற்கான இறுதிவாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வெளியிட அதனை திருவண்ணாமலை உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி பெற்றுக்கொண்டார்.

அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜானகி, தேர்தல் தாசில்தார் தனஞ்செழியன், அனைத்து கட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் 3-ந் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்பின்பு டிசம்பர் 15-ந் தேதி வரையிலான நாட்களில் மாவட்டம் முழுவதும் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்யக்கோரி முகாம்கள் நடந்தன.

அதில் 8 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து வரப்பெற்ற படிவங்களை பரிசீலனை செய்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு அதனை அடிப்படையாக கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் இன்று பட்டியல் வெளியிடப்படுகிறது.

இளம்வாக்காளர்கள்

இந்த பட்டியலில் புதிதாக 13 ஆயிரத்து 48 ஆண் வாக்காளர்களும், 15 ஆயிரத்து 267 பெண் வாக்காளர்களும், 12 இதர வாக்காளர்களும் என மொத்தம் 28 ஆயிரத்து 327 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இதில் 18, 19 வயதுடைய 9 ஆயிரத்து 5 ஆண் வாக்காளர்களும், 7 ஆயிரத்து 180 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 4 பேர் என 16 ஆயிரத்து 189 இளம் வாக்காளர்கள் அடங்குவார்கள். அதன்படி நமது மாவட்டத்தில் 19 லட்சத்து 62 ஆயிரத்து 843 வாக்காளர்கள் உள்ளனர்.

இறப்பு, இரு முறைப்பதிவு, இடமாற்றம் ஆகிய காரணங்களால் 14 ஆயிரத்து 245 ஆண் வாக்காளர்களும், 17 ஆயிரத்து 171 பெண் வாக்காளர்களும் என 31 ஆயிரத்து 416 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here