நாளை தீபத் திருவிழா கொடியேற்றம்: 10 நாள் தீபத் திருவிழா

0
3834

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை (நவம்பர் 23) நடைபெறுகிறது. இதையொட்டி, நகரின் காவல் தெய்வங்களான ஸ்ரீதுர்க்கையம்மன், ஸ்ரீபிடாரியம்மனுக்கு திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் உற்சவங்கள் நடைபெற்றன.

சிவனின் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. இந்தத் திருவிழாவைக் காண உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருவர்.

நிகழ் ஆண்டுக்கான தீபத் திருவிழா வியாழக்கிழமை (நவம்பர் 23) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக, திருவண்ணாமலை நகரின் காவல் தெய்வங்களான ஸ்ரீதுர்க்கையம்மன், ஸ்ரீபிடாரியம்மன், ஸ்ரீவிநாயகர் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, திங்கள்கிழமை இரவு ஸ்ரீதுர்க்கையம்மன் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி, திருவண்ணாமலை, சின்னக்கடைத் தெருவில் உள்ள ஸ்ரீதுர்க்கையம்மன் கோயிலில் அம்மனுக்கு திங்கள்கிழமை மாலை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன.

இரவு 9 மணிக்கு காமதேனு வாகனத்தில் ஸ்ரீதுர்க்கையம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், வாணவேடிக்கை, மேளதாளங்கள் முழங்க மாட வீதிகளை வலம் வந்த அம்மன் நள்ளிரவில் மீண்டும் கோயிலை வந்தடைந்தார்.

ஸ்ரீபிடாரியம்மன் உற்சவம்: தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை மாலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கொடிமரம் எதிரே உள்ள ஸ்ரீபிடாரியம்மன் சன்னதியில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இரவு 9.30 மணிக்கு சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீபிடாரியம்மன், மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்ற இரு உத்ஸவங்களிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இன்று ஸ்ரீவிநாயகர் உற்சவம்: காவல் தெய்வங்களின் 3-ஆவது நாள் வழிபாடான புதன்கிழமை (நவம்பர் 22) ஸ்ரீவிநாயகர் உற்சவம், சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி மாட வீதிகளை வலம் வருவார். இத்துடன் காவல் தெய்வங்களின் 3 நாள் வழிபாடு நிறைவு பெறுகிறது.

நாளை தீபத் திருவிழா கொடியேற்றம்: 10 நாள் தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் வியாழக்கிழமை (நவம்பர் 23) நடைபெறுகிறது. அதிகாலை 4 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் துலா லக்னத்தில் கோயிலில் உள்ள தங்கக் கொடிமரத்தில் தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெறுகிறது.

இதையடுத்து, காலை 9 மணிக்கு வெள்ளி விமானங்களில் பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும், இரவு 8 மணிக்கு மூஷிக வாகனத்தில் ஸ்ரீவிநாயகர், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஹம்ச வாகனத்தில் ஸ்ரீபராசக்தியம்மன், சிம்ம வாகனத்தில் ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளின் வீதியுலா நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் இரா.ஜெகந்நாதன் தலைமையிலான ஊழியர்கள், உபயதாரர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here