தொழில்நுட்ப கோளாறு காரணமாக ‘சந்திராயன்-2’ 21 அல்லது 22ம் தேதி ஏவப்படலாம் என தகவல்

0
5583
chandrayan

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளி ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலவைப் பற்றி ஆராய்வதற்காக இஸ்ரோ ‘சந்திராயன்-1’ என்ற விண்கலத்தை தயாரித்து கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இதன் மூலம் நிலவின் மேற்பரப்பில் நீர் மூலக்கூறுகளை கண்டுபிடிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆய்வுகளை செய்து முக்கிய பங்கு வகித்தது.

தொடர்ந்து நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக மற்றொரு விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டது. இதற்காக பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் ரூ.1,000 கோடி மதிப்பில் ‘சந்திராயன்-2’ விண்கலத்தை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கினர். இந்த விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு கொண்டுவரப்பட்டு ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டில் பொருத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டு வந்தது.
இந்தநிலையில் 20 மணிநேர கவுண்ட்டவுனை முடித்துக்கொண்டு ‘சந்திராயன்-2’ விண்கலத்தை சுமந்து கொண்டு ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து நேற்று அதிகாலை 2.51 மணிக்கு விண்ணை நோக்கி வெற்றிகரமாக சீறிப்பாய தயார் நிலையில் இருந்தது.
அப்போது, 3 நிலைகளை கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டின் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு இருந்தது. 640 டன் எடையும், 4 மீட்டர் உயரமும் கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டின் செயல்பாட்டை கண்காணிப்பு கேமரா மூலம் விஞ்ஞானிகள் கண்காணித்து கொண்டு இருந்தனர்.
இந்தநிலையில் 19 மணிநேர கவுண்ட்டவுனை வெற்றிகரமாக முடித்த நிலையில் நள்ளிரவு 1.55 மணிக்கு திடீரென்று கவுண்ட்டவுன் நிறுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து இஸ்ரோ வெளியிட்ட அறிக்கை ஒன்றை ஒலிபெருக்கி மூலம் இஸ்ரோ செய்தி-மக்கள் தொடர்பு அதிகாரி பி.ஆர்.குருபிரசாத் வாசித்தார். அதில்,
சந்திராயன்-2 விண்கலம் ஏவுவதற்கு 56 நிமிடங்களுக்கு முன்பாக ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டில் ஒரு தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்திராயன்-2 ஏவுவது நிறுத்தப்பட்டது. மறுபடியும் விண்ணில் ஏவும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார். 
இந்த நிலையில், நிலவின் தென் பகுதியில் சூரிய ஒளி இருக்கும் சமயத்தில் சந்திராயன்-2 விண்கலத்தை தரை இறங்க செய்யும் வகையில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த மாதம் வருகிற ஞாயிறு மதியம் (ஜூலை 21) அல்லது திங்கள் காலை (22ம் தேதி ) சந்திராயன்-2 விண்கலத்தை ஏவ விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here