திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 87.97 சதவீத மாணவ – மாணவிகள் தேர்ச்சி

0
2233

 

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை பள்ளிக்கு சென்றும், ஆன்-லைனிலும் பார்த்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தை கல்வி நிர்வாக வசதிக்காக திருவண்ணாமலை மற்றும் செய்யாறு என 2 கல்வி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 8,896 மாணவர்களும், 9,369 மாணவிகளும், செய்யாறு கல்வி மாவட்டத்தில் 4,735 மாணவர்களும், 5,497 மாணவிகளும் என மொத்தம் 28 ஆயிரத்து 497 பேர் தேர்வு எழுதினர். இதில் திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 7,693 மாணவர்களும், 8,631 மாணவிகளும், செய்யாறு கல்வி மாவட்டத்தில் 3,841 மாணவர்களும், 4,904 மாணவிகளும் என மொத்தம் 25 ஆயிரத்து 69 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 3,428 பேர் தேர்ச்சி பெறவில்லை.
திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 86.48, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 92.12 ஆகும். செய்யாறு கல்வி மாவட்டத்தில் மாணவர்கள் 81.11 சதவீதம், மாணவிகள் 89.21 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தத்தில் மாணவர்கள் 84.62 சதவீதமும், மாணவிகள் 91.05 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அனைத்து மாவட்டங்களையும் ஒப்பிடும் போது திருவண்ணாமலை மாவட்டத்தில் 87.97 சதவீத மாணவ – மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 91.84 ஆகும். கடந்த ஆண்டுடன் இந்தாண்டை ஒப்பிடும் போது 3.87 சதவீதம் தேர்ச்சி குறைந்து உள்ளது. இது கவலை அளிப்பதாகும். எனினும் கடந்த ஆண்டை போல இந்தாண்டும் திருவண்ணாமலை மாவட்டம் 23-வது இடத்தை பிடித்துள்ளது.
மாவட்டத்தில் மொத்தம் 221 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் 38 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் 3 அரசு உதவி பெறும் பள்ளிகளும் அடங்கும். 129 அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு மோத்தக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி மட்டும் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது.
அரசு பள்ளி தேர்ச்சி அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டம் 21-வது இடத்தை பிடிக்கிறது. கடந்த ஆண்டு 7 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றது. கடந்த ஆண்டு 43 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. அதனுடன் இந்தாண்டை ஒப்பிடும் போது 38 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. 5 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை இழந்துள்ளது. அடுத்த கல்வி ஆண்டில் அனைத்து அரசு பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்ச்சி பெறாத மாணவர்கள் மீண்டும் தேர்வில் தேர்ச்சி பெற மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். உடனடி தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு அடுத்த மாதம் (ஜூன்) முதல் சிறப்பு வகுப்புகள் அந்தந்த பள்ளிகளிலேயே நடத்தப்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற திருவண்ணாமலை மாவட்ட ஆசிரியர்கள் பலர் மாவட்ட நிர்வாகத்திற்கு உறுதுணையாக இருந்துள்ளனர். மேலும் இனி வருங்காலங்களில் திருவண்ணாமலை மாவட்டத்தை கல்வி தரத்தில் முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தொடக்கக்கல்வி முதல் உயர்நிலைக்கல்வி வரை படிக்கும் மாணவர்கள் பெரும்பாலானவர்கள் அடிப்படை கல்வியை படிக்காமல் மேல்வகுப்பிற்கு செல்கின்றனர். எனவே, மேல் வகுப்பில் அந்த மாணவர்களால் தேர்ச்சி பெறுவதில் சிக்கல் உள்ளது. இனி வருங்காலங்களில் தொடக்கக்கல்வியும் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் எந்த பாடத்தில் தேர்ச்சி சதவீதம் குறைவோ அந்த பாடத்திட்டத்திற்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படும். மேலும் தேர்ச்சி சதவீதம் காட்டாமல், குறைந்த தேர்ச்சி விகிதம் அளித்த அந்த பாடப்பிரிவின் ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த பள்ளி கட்டணத்தை அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும். அவ்வாறு ஒட்டாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here