திருவண்ணாமலை-மஹா தீப திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது

0
2288

திருவண்ணாமலை: ”திருவண்ணாமலை, மஹா தீப திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது,” என, கலெக்டர் கந்தசாமி கூறினார்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், டிச., 2 அதிகாலை, 4:00 மணிக்கு பரணி தீபம், மாலை, 6:00 மணிக்கு மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதை காண, பல்வேறு பகுதிகளில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர். இதையொட்டி அடிப்படை வசதி செய்தல் உட்பட அனைத்து பணிகளை, கலெக்டர் கந்தசாமி நேற்று ஆய்வு செய்தார். எஸ்.பி., பொன்னி, ஆர்.டி.ஓ., உமாமகேஸ்வரி உடனிருந்தனர்.

பின், நிருபர்களிடம் கலெக்டர் கந்தசாமி கூறியதாவது: தீப திருவிழாவுக்கு, 20 லட்சம் பக்தர்கள் வருவர். தற்காலிக பஸ் ஸ்டாண்ட்களில் நகராட்சி சார்பாக மேற்கொள்ளப்படும் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து, ஆய்வு செய்யப்பட்டது. அனைத்து ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. தெற்கு ரயில்வே மூலம், திருநெல்வேலி, திருச்சி, சென்னை, விழுப்புரம், வேலூர் மார்க்கங்களிலிருந்து, ஒன்பது சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும், 3,000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 16 தற்காலிக பஸ் ஸ்டாண்ட்களில் இருந்து, பக்தர்களை கிரிவலப்பாதை வரை இலவசமாக அழைத்துச் செல்ல, 82 மினி பஸ்கள் இயக்கப்பட உள்ளன. வேலூர் சாலையில் உள்ள ஈசான்ய மைதானம், திருவண்ணாமலை மத்திய பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில், பக்தர்கள் கொண்டு வரும் பொருட்களை இலவசமாக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 15 ஆயிரம் கார்கள் நிற்கும் வகையில், 50 இடங்களில் கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. கிரிவலப்பாதையில், ஏழு இடங்களில் அன்னதானம் வழங்கும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை டவுன், கோவில் வளாகம், கிரிவலப்பாதை என, 43 இடங்களில், மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாட்டு சந்தை, குதிரை சந்தை, கார் பார்க்கிங், கழிவறை உள்ளிட்ட அனைத்திற்கும் கட்டணம் கிடையாது. 8,000 போலீசார், 35 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here