திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல் நண்பர்களுக்கு இலவசச் சீருடை, அடையாள அட்டைகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை அரசுத் தொழில் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவுக்கு திருவண்ணாமலை மாவட்டக் காவல் நண்பர்கள் குழுவின் மாவட்டத் தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமை வகித்தார். துணை ஒருங்கிணைப்பாளர்கள் எம்.மோகன், ஏ.முரளி, த.தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் அரசுத் தொழில் பயிற்சி நிலைய (ஐடிஐ) முதல்வர் ஹெச்.சுகுமார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ஐடிஐ மாணவர்கள் 110 பேரை காவல் நண்பர்கள் குழுவில் சேர்த்து அவர்களுக்கு இலவச சீருடை, அடையாள அட்டைகளை வழங்கினார். ஐடிஐ பயிற்சி நிலைய அலுவலர்கள் பி.செல்வராஜ், டிஆறுமுகம், உதவிப் பயிற்சி அலுவலரும், என்எஸ்எஸ் திட்ட அலுவலருமான ஆர்.கண்ணன், அலுவலக மேலாளர் பி.செல்வம், காவல் நண்பர்கள் குழுவின் நிர்வாகிகள் கே.மல்லிகார்ஜுன், ஐடிஐ ஒருங்கிணைப்பாளர்கள் பாலசுந்தரம், சுபாஷ் சந்திரபோஸ், மாணவர்கள் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.