திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. திருமாலும், பிரம்மாவும் அடி முடி காணாமல் திகைத்தபோது லிங்கோத்பவ மூர்த்தியாக அருணாசலேஸ்வரர் அருள்பாலித்த திருநாளே மகா சிவராத்திரி என்று கூறப்படுகிறது. அதனால் மகா சிவராத்திரி உருவான திருத்தலம் என்ற தனிச் சிறப்பு பெற்றது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்.
மகா சிவராத்திரி விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி அதிகாலை 5 மணி முதல் பகல் 12 மணிவரை ரூ.200 கட்டணத்தில் லட்சார்ச்சனை விழா நடைபெற்றது.
மகா சிவராத்திரியை யொட்டி நேற்று அதிகாலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. நேரம் செல்லச் செல்ல பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. ரூ.200 கட்டணம் செலுத்திய பக்தர்கள் லட்சார்ச்சனையில் கலந்துகொண்டனர். நீண்ட வரிசையில் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மகா சிவராத்திரியை யொட்டி முதல்கால பூஜை, 2-ம் கால பூஜை, 3-ம் கால பூஜை, 4-ம் கால பூஜை நடந்தது. முதல் கால பூஜையை பிரம்மாவும், 2-ம் கால பூஜையை திருமாலும், 3-ம் கால பூஜையை உமையாளும், 4-ம் கால பூஜையை முப்பத்து முக்கோடி தேவர்களும் செய்ததாக ஐதீகம் உள்ளது.
நேற்று நள்ளிரவு 12 மணிக்கு சாமி சன்னதியின் பின்பகுதியில் அமைந்துள்ள லிங்கோத்பவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இந்த பூஜையில் மட்டும் லிங்கோத்பவருக்கு தாழம் பூ பயன்படுத்தப்பட்டது. விடிய, விடிய பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தீ விபத்து போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கிரிவல நாதஸ்வர தவில் இசை சங்கத்தலைவர் பிச்சாண்டி தலைமையில் நேற்று 16 கால மண்டபம் அம்மன் தேர் அருகில் இசை விழா நடந்தது.
மேலும் கோவிலில் உள்ள கலையரங்கத்தில் மாலை 4 மணி முதல் தேவாரப் பாடல்கள் இன்னிசை, பரத நாட்டியம், வாய்ப்பாட்டு மற்றும் வயலின் இசை என தொடர்ந்து நள்ளிரவு 12 மணி வரை கலை நிகழ்ச்சி நடைபெற்றது.