திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், 29 வயதான ருக்கு என்ற யானை உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும்பாலானோர் யானை ருக்குவிடம் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு செல்கின்றனர். மேலும் சிலர் யானை ருக்கு முன்பு நின்று ‘செல்பி’யும் எடுத்துக்கொள்கின்றனர்.
கோவில் யானைகளுக்கு அரசு சார்பில், கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் புத்துணர்வு முகாம் இன்று தொடங்குகிறது. இந்த முகாமில் பங்கேற்க செல்லும் யானைக்கு கால்நடைத்துறை மருத்துவர்கள் மூலம் மருத்துவ பரிசோதனை செய்யப்படும். அதன்படி, மாவட்ட கால்நடைத்துறை மருத்துவர்கள் மூலம் யானை ருக்குவிற்கு தொற்று நோய் ஏதேனும் உள்ளதா?, உடல் நல குறைபாடு ஏதேனும் உள்ளதா? என்று பரிசோதனை செய்து, எந்தவித குறைபாடும் இல்லை என்று சான்று அளித்தனர்.
இதனையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 12.30 மணி அளவில் யானை ருக்கு லாரி மூலம் மேட்டுபாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டில் நடைபெறும் யானைகள் புத்துணர்வு முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டது.
யானை ருக்குவை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாக இணை ஆணையர் ஜெகன்நாதன் வழி அனுப்பி வைத்தார். யானை ருக்கு உடன் கால்நடை உதவி மருத்துவர் சந்திரன், கோவில் யானை (பொறுப்பு) அலுவலர் குமார், யானை பாகன்கள் சிங்காரம், சேஷாத்திரி ஆகியோர் சென்றனர்.
இதேபோல கண்ணமங்கலம் அருகே உள்ள படவேடு யோகராமச்சந்திரமூர்த்தி கோவிலுக்கு சொந்தமான யானை லட்சுமி புத்துணர்வு முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டது.