திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப நெய் காணிக்கை கட்டணம், ஒரு கிலோவிற்கு, 200 ரூபாயிலிருந்து, 250 ரூபாயாக உயர்த்தி, அறநிலையத்துறை ஆணையர் ஜெயா உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில், நடக்கும் கார்த்திகை தீப திருவிழா பிரசித்தி பெற்றது. விழாவை காண பல்வேறு பகுதிகளிலிருந்து, பல லட்சம் பக்தர்கள் வருகை தருவர். இந்த ஆண்டு தீப திருவிழா வரும் நவ., 23ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து டிச.,2ல், அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் கருவறை எதிரில் பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்நிலையில், தற்போது உயர் நீதிமன்றம் கோவில்களில் தரமான நெய்யை பயன்படுத்த வேண்டும். தரமற்ற நெய்யை பயன்படுத்த கூடாது என உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, இந்த ஆண்டு மகா தீபம் ஏற்ற, ஆவின் நிர்வாகத்திடமிருந்து, 3,500 கிலோ முதல் ரக நெய்யை கொள்முதல் செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தற்போது ஆவின் நிர்வாகம் ஒரு கிலோ நெய், 437 ரூபாய்க்கு விலை நிர்ணயம் செய்து விற்கிறது. ஆனால், பக்தர்களிடம் நெய் காணிக்கை ஒரு கிலோவிற்கு, 200 ரூபாய் என, கடந்த, 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு, ஒரு கிலோ நெய் காணிக்கை, 400 ரூபாய் ஆக உயர்த்த கோவில் நிர்வாம் சார்பில் அறநிலையத்துறை ஆணையருக்கு பரிந்துரை செய்து ஒப்புதல் கேட்கப்பட்டது. இதற்கு பக்தர்களிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியது. எனவே, ஒரு கிலோ நெய் காணிக்கை கட்டணமாக, 250 ரூபாய் என நிர்ணயம் செய்து, அறநிலையத்துறை ஆணையர் ஜெயா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து கோவில் இணை ஆணையர் ஜெகன்நாதன் கூறியதாவது: தீப திருவிழாவில் அருணாசலேஸ்வரர் கோவிலில், முதல் ரக நெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மகா தீபம் ஏற்ற, ஆவின் நிர்வாகத்திடம் கொள்முதல் செய்யப்படும் நெய்யை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளை கொண்டு பரிசோதித்த பிறகே, மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும். பக்தர்கள் நேரடியாக செலுத்தும் நெய் தரமானதாக இருக்க வேண்டும். ஆவின் நிர்வாகம் ஒரு கிலோ நெய், 437 ரூபாய் என விலை நிர்ணயம் செய்துள்ளது. பக்தர்களின் நலன் கருதி ஒரு கிலோ, 250 ரூபாய், அரை கிலோ, 150 ரூபாய், கால் கிலோ, 80 ரூபாய் என நிர்ணயம் செய்து, இந்த தொகையை பக்தர்கள் காணிக்கை செலுத்தலாம் என அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மேலும், செக் அல்லது டி.டி.யாக வழங்க விரும்புகிறவர்கள், ‘இணை ஆணையர்/செயல் அலுவலர், அருணாசலேசுவரர் திருக்கோயில்’ என்ற பெயரில், ‘இணை ஆணையர், அருணாசலேஸ்வரர் திருக்கோவில், திருவண்ணாமலை- 6060 601’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். ஆன் லைன் மூலமாக செலுத்த விரும்புகிறவர்கள், www.arunachaleswarartemple.tnhrce.in என்ற முகவரியில் கார்த்திகை தீப நெய் குட காணிக்கை பக்கத்தில் சென்று செலுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.