திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக, அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் பங்களிப்புடன் ‘என் குழந்தை என் கவனிப்பு’ என்ற புதிய திட்டத்தை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தொடங்கி வைத்தார். அப்போது தனது பங்களிப்பாக ரூ.10 ஆயிரத்தை அரசு பள்ளி மாணவர்களிடம் வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,120 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் 2 லட்சத்து 10 ஆயிரம் பள்ளி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி கல்வித்துறையை மேம்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ‘என் குழந்தை என் கவனிப்பு’ என்ற கருத்தின் அடிப்படையில் அரசு பள்ளி மாணவர்களை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளவர்களின் பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதாவது, சில பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கலாம். குறிப்பாக தொலைதூர பகுதிகளில் இருக்கும் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை அதிகமாக இருக்கிறது. அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கும், மேம்பட்ட கருவிகள், வழிகாட்டி புத்தகங்கள், நீட் பயிற்சி, கலை நிகழ்ச்சிகள் நடத்திட, சுற்றுலா அழைத்து செல்வதற்கு, இதுபோன்ற பல்வேறு வசதிகள் செய்து தரும் போது, அதனால் அவர்களின் கல்வித்தரம் உயரும். அதற்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், ஒவ்வொரு தேவைகளுக்கும் பல்வேறு தரப்பில் உதவி பெறுவதற்கு பதிலாக, அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் காலையில் முடிவு செய்து, மாலையில் அனைவரும் தங்களின் மாத சம்பளத்தில் இருந்து தங்களால் இயன்ற தொகையை தற்போது வழங்கியுள்ளார்கள்.
150-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டு தங்களின் பங்களிப்பாக ரூ.9 லட்சம் வழங்கியுள்ளார்கள். இந்த திட்டமானது திருவண்ணாமலை மாவட்டத்தில் கண்டிப்பாக அரசு பள்ளி மாணவர்களிடம் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக கலெக்டர் தலைமையில், முதன்மை கல்வி அலுவலரை செயலாளராக கொண்டு 10 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் இதை நிர்வகித்து திட்டத்தினை செயல்படுத்துவார்கள்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லோகநாயகி, மகளிர் திட்ட அலுவலர் ஜெயசுதா, முதன்மை கல்வி அலுலவர் ஜெயக்குமார், அரசு அலுவலர்கள், அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.