திருவண்ணாமலையில் தலித் இளைஞர் படுகொலை: ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம்

0
2133

திருவண்ணாமலையில் தலித் இளைஞர் படுகொலை செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ” திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகேயுள்ள புளியரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர்கள் ஜூலை 23 அன்று சித்தேரியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கு வந்த செல்லபெருபுலிமேடு பகுதியைச் சேர்ந்த வேறு சமூகத்தினர் கிரிக்கெட் விளையாடிய தலித் இளைஞர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.

மீண்டும் மாலையில் தலித் மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று அச்சுறுத்தியதால் தலித் மக்கள் அவர்களைப் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். ஆனால் அப்போது பணியில் இருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜோதி ஒப்படைக்கப்பட்டவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்காமல் அவர்களை விடுவித்துள்ளார்.

இதனால் மேலும் ஊக்கம் பெற்ற சாதி வெறியர்கள் தங்கள் கிராமத்திலுள்ள ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களுடன் கத்தி, இரும்பு ராடு உள்ளிட்ட ஆயுதங்களுடன் தலித் பகுதிக்குள் புகுந்து கண்ணில் பட்ட அனைவரையும் தாக்கியுள்ளனர். வெங்கடேசன், ஆதிகேசவன் ஆகிய இருவரையும் கடத்திச் சென்று கொலைவெறியுடன் தாக்கியுள்ளனர்.

அரிவாளால் வெட்டப்பட்ட வெங்கடேசன் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பரிதாபமாக இறந்து விட்டார். சாதி வெறியர்களின் இந்த தாக்குதலில் வீடுகள், மளிகை கடை, இருசக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன, பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளன.

சாதி வெறியர்களின் கொடூர தாக்குதலையும், படுகொலையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. கொலை மற்றும் வன்கொடுமை செயலில் ஈடுபட்ட அனைவரையும் குற்றவியல் மற்றும் வன்கொடுமை சட்டங்களின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அலட்சியப் போக்குடன் நடந்து கொண்ட சிறப்பு உதவி ஆய்வாளர் ஜோதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுன் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை அதிகாரிகளை வலியுறுத்துகிறது.

மேலும், பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிடவும், சாதி வெறியை தூண்டுவோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்” என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here