சென்னை: டிடிவி தினகரன் இன்று திருவண்ணாமலைக்கு சென்றுள்ளார். மூக்குப் பொடி சித்தரிடம் ஆசி பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிடிவி தினகரன் திடீர் பக்தராக மாறியுள்ள மூக்குப் பொடி சித்தர் திருவண்ணாமலையில் பிரபலமானவர். அவர் அருளாசி கொடுக்கும் ஸ்டைலே வித்தியாசமாக இருக்கிறது.
திருவண்ணாமலையில் ஏகப்பட்ட சாமியார்களைப் பார்க்கலாம். அழுக்குப் படிந்த தேகத்துடன், நீண்ட ஜடா முடியுடன் சுற்றிக் கொண்டிருக்கும் பலருக்கு பெரிய பெரிய பணக்காரர்கள், தொழிலதிபர்கள் எல்லாம் பக்தர்களாக இருப்பார்கள் என்பது ஆச்சரியமான ஒன்று. பச்சை உடையணிந்து காணப்படும் மூக்குப்பொடி சித்தர் பெரும்பாலும் மெளனமாகவே இருப்பார்.
இவர் யாரையாவது நிமிர்ந்து பார்த்தால் அல்லது ஏதாவது பேசினால் அவர்களுக்கு அதுதான் அருளாசி. அந்த ஒரு வார்த்தைக்காகவே பல மணி நேரம் காத்திருப்பார்களாம் பக்தர்கள். திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த டிடிவி தினகரன் கடந்த ஆகஸ்ட் மாதம் திருவண்ணாமலைக்கு சென்று மூக்குப்பொடி சித்தரை சந்தித்து ஆசி பெற்றார். ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிகள் இணைந்து கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் மீண்டும் இன்று திருவண்ணாமலை சென்று மூக்குப்பொடி சித்தரை சந்திக்கப் போகிறார். பார்க்கலாம், மூக்குப் பொடி சித்தரின் அருளாசி, தினகரனை உயர்த்துமா என்பதை.