திருவண்ணாமலை: சாத்தனூர் அணையில் இருந்து, பாசனத்திற்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூரில், 119 அடி உயரத்தில், 7,321 மில்லியன் கன அடி நீர் கொள்ளவுடன் கூடிய அணை கட்டப்பட்டுள்ளது.
தற்போது, அணையில் நீர் முழு கொள்ளளவு உள்ளது. இதையடுத்து, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டத்தில், பாசனத்திற்காக, அணையில் இருந்து தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்ற தமிழக அரசு, தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. அதன்படி, நேற்று காலை, 9:00 மணிக்கு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்து, மலர் தூவினார். கலெக்டர் கந்தசாமி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இடது புற கால்வாயில் வினாடிக்கு, 350 கன அடி வீதம், வலதுபுற கால்வாயில் வினாடிக்கு, 220 கன அடி வீதம், மொத்தம், 570 கன அடி தண்ணீர், அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர், தொடர்ந்து மே, 8 வரை, 90 நாட்களுக்கு திறந்து விடப்படும். இதன் மூலம், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த, 45 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறும். திருக்கோவிலூர் அணைக்கட்டு பழைய ஆயக்கட்டு பகுதியான, 5,000 ஏக்கருக்கு, இரண்டாம் போக சாகுபடிக்கு, 1,200 மில்லியன் கன அடி நீர், பிப்., முதல் ஏப்., மாதத்திற்குள், விவசாயிகள் தேவைக்கேற்க, இரண்டு தவணைகளில் தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது என, அதிகாரிகள் கூறினர்.