கார்த்திகை தீபத்திருவிழா: திருவண்ணாமலைக்கு 1,000 சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு

0
2748

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து, 1,000 சிறப்பு பஸ்களை இயக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழா, டிச.,2ல் நடக்கிறது. இதற்காக திருவண்ணாமலை வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அவர்களின் வசதிக்காக, சென்னை, சேலம், திருச்சி, மதுரை, கோவை, வேலூர் ஆகிய இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு, நவ.,25 முதல், டிச.,5 வரை, சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதன் படி, சேலம், விழுப்புரம் கோட்டங்களின் சார்பில், தலா, 300, கோவை கோட்டத்தில் இருந்து, 200, பிற கோட்டங்களில் தலா, 50 என, 1,000 சிறப்பு பஸ்கள், திருவண்ணாமலைக்கு இயக்கப்படும். இதில், விரைவுப் போக்குவரத்துக்கழகத்தின் பஸ்களுக்கான முன்பதிவு துவங்கியுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: திருவண்ணாமலை தீபத்தை முன்னிட்டு, பயணிகளின் வருகையை பொறுத்து, சிறப்பு பஸ்களின் எண்ணிக்கையை அதிகரித்து கொள்ள, கோட்ட மேலாண்மை இயக்குனர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. விரைவுப் போக்குவரத்துக்கழக பஸ்களுக்கான முன்பதிவு துவங்கி உள்ளதால், பிற கோட்ட பஸ்களுக்கான முன்பதிவு, நவ.,20ல் துவங்கும். அப்போது, விரைவுப் போக்குவரத்துக்கழகத்தின் முன்பதிவு மையங்களிலேயே, பிற கோட்ட பஸ்களுக்கும் முன்பதிவு செய்யலாம். அது மட்டுமின்றி, திருவண்ணாமலையில், சிறப்பு முன்பதிவு கவுண்டர்கள் துவக்கப்பட உள்ளது, போல், பிற நகரங்களிலும் சிறப்பு கவுண்டர்கள் துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here