ஐ.பி.எல். கிரிக்கெட் சென்னை vs பெங்களூரு அணிகள் இன்று மோதல்

0
2539

புனே,

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ்-டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் புனேயில் இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெறும் 35-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. டோனி தலைமையிலான சென்னை அணி இதுவரை 9 ஆட்டத்தில் ஆடி 6 வெற்றி, 3 தோல்வியுடன் நல்ல நிலையில் உள்ளது. கடந்த 3 ஆட்டங்களில் சென்னை அணி 2-ல் தோல்வியை சந்தித்தது. சென்னை அணியின் பேட்டிங் வலுவாக இருந்தாலும், பந்து வீச்சில் பலவீனம் வெளிப்பட தான் செய்கிறது.

சென்னை அணியின் பேட்டிங்கில் அம்பத்தி ராயுடு (391 ரன்கள்) ஷேன் வாட்சன், வெய்ன் பிராவோ, டோனி, சுரேஷ் ரெய்னா, பாப் டுபிளிஸ்சிஸ் ஆகியோர் நல்ல பார்மில் இருக்கின்றனர். பந்து வீச்சில் ஷர்துல் தாகூர் சவால் அளிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். ஹர்பஜன்சிங் உள்பட மற்ற பந்து வீச்சாளர்கள் ஏற்றம் காண வேண்டியது அவசியமானதாகும். பெங்களூரு அணி 8 ஆட்டத்தில் ஆடி 3 வெற்றி, 5 தோல்வியுடன் இக்கட்டான நிலையில் இருக்கிறது. கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி மும்பையை வீழ்த்தியது. இனி வரும் ஆட்டங்கள் அனைத்திலும் வென்றால் தான் ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடி பெங்களூரு அணிக்கு இருக்கிறது.

பெங்களூரு அணியில் கேப்டன் விராட்கோலி பேட்டிங்கில் அசத்தி வருகிறார். அவர் இதுவரை 349 ரன்கள் சேர்த்துள்ளார். 6 ஆட்டங்களில் 280 ரன்கள் எடுத்துள்ள டிவில்லியர்ஸ் காய்ச்சல் காரணமாக கடந்த 2 ஆட்டங்களில் ஆடவில்லை. அவர் உடல்தகுதி பெற்றுவிட்டதால் இன்றைய ஆட்டத்தில் ஆடுகிறார். குயின்டான் டி காக் (8 ஆட்டங்களில் 201 ரன்), பிரன்டன் மெக்கல்லம் (5 ஆட்டங்களில் 122 ரன்) எதிர்பார்ப்புக்கு ஏற்ப இன்னும் சோபிக்கவில்லை. பந்து வீச்சில் உமேஷ் யாதவ் (11 விக்கெட்), யுஸ்வேந்திர சாஹல் (7 விக்கெட்) ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர் பந்து வீச்சு எடுபடவில்லை.

முந்தைய லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையிடம் தோல்வி கண்டது. அதற்கு பதிலடி கொடுக்க முயற்சிக்கும். சென்னை அணி தனது ஆதிக்கத்தை தொடர ஆர்வம் காட்டும். இரு அணியிலும் வலுவான பேட்டிங் வரிசை இருப்பதால் இந்த ஆட்டத்தில் ரன் குவிப்புக்கு குறைவு இருக்காது. ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் இரு அணிகளும் 21 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் சென்னை அணி 13 முறையும், பெங்களூரு அணி 7 முறையும் வென்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

ஐதராபாத்தில் இன்று இரவு 8 மணிக்கு அரங்கேறும் மற்றொரு லீக் (36-வது) ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

கனே வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணி 8 ஆட்டத்தில் ஆடி 6 வெற்றி, 2 தோல்வியுடன் முன்னணியில் இருக்கிறது. ஐதராபாத் அணியின் பந்து வீச்சு அருமையாக இருக்கிறது. சித்தார்த் கவுல், ரஷித் கான், சந்தீப் ஷர்மா, பாசில் தம்பி ஆகியோரின் பந்து வீச்சில் கச்சிதமாக செயல்படுகிறார்கள். முதுகுவலி காரணமாக கடந்த 3 ஆட்டங்களில் ஆடாத வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் இந்த ஆட்டத்தில் ஆடுவார் என்று கேப்டன் கனே வில்லியம்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பேட்டிங்கில் கனே வில்லியம்சன், மனிஷ் பாண்டே, விருத்திமான் சஹா, தீபக் ஹூடா, யூசுப் பதான் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ஐதராபாத் அணி கடந்த 3 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி கண்டு கம்பீரமாக உள்ளது.

ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணி 9 ஆட்டத்தில் ஆடி 3 வெற்றி, 6 தோல்வி கண்டுள்ளது. கடைசி லீக் ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானை சாய்த்தது. டெல்லி அணியின் பேட்டிங்கில் ஸ்ரேயாஸ் அய்யர், பிரித்வி ஷா, ரிஷாப் பான்ட், விஜய் சங்கர் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். காலின் முன்ரோ, மேக்ஸ்வெல் பேட்டிங் இன்னும் எடுபடவில்லை. பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட் 13 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். அவேஷ்கான், பிளங்கெட், ஷபாஸ் நதீம் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும்.

இந்த ஆட்டத்தில் தோற்றால் அடுத்த சுற்று வாய்ப்பு பறிபோய்விடும் என்பதால் டெல்லி அணி வெற்றிக்காக கடுமையாக போராடும். வலுவான ஐதராபாத் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது டெல்லி அணிக்கு பெருத்த சவாலாகும். இரு அணிகளும் ஐ.பி.எல். போட்டி தொடரில் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் ஐதராபாத் அணி 6 முறையும், டெல்லி அணி 4 முறையும் வெற்றி கண்டுள்ளன. இன்று நடைபெறும் இரண்டு போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here