இரண்டாவது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியும் இங்கிலாந்திலேயே (1979-ம் ஆண்டு ஜூன் 9-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை) அரங்கேறியது. முதலாவது உலக கோப்பை போட்டியை போன்றே இந்த போட்டியிலும் 8 அணிகள் பங்கேற்றன. ஆட்டம் 60 ஓவர், வெள்ளை நிற சீருடை, சிவப்பு நிற பந்து மற்றும் ஆட்ட அட்டவணை முறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அணிகளில் மட்டும் ஒரே ஒரு மாற்றமாக கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு பதிலாக கனடா இடம் பெற்றது.
இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, கனடா ஆகிய அணிகள் ‘ஏ’ பிரிவிலும் வெஸ்ட்இண்டீஸ், நியூசிலாந்து, இலங்கை, இந்தியா ஆகிய அணிகள் ‘பி’ பிரிவிலும் இடம் பிடித்து இருந்தன. இலங்கை, கனடா டெஸ்ட் அந்தஸ்து இன்றி தகுதி பெற்ற அணிகளாகும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.
வெங்கட்ராகவன் தலைமையிலான இந்திய அணி இந்த போட்டியில் ஒரு வெற்றியை கூட ருசிக்காமல் லீக் சுற்றுடன் வெளியேறி மோசமான சாதனையை சொந்தமாக்கியது. லீக் ஆட்டங்களில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசிடமும், 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடமும், 47 ரன் வித்தியாசத்தில் இலங்கையிடமும் தோல்வி அடைந்தது. மூன்று ஆட்டங்களிலும் இந்திய அணி 200 ரன்னை எட்டவில்லை. லீக் ஆட்டங்களில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளிடம் தோல்வி கண்ட ஆஸ்திரேலிய அணி கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் ஆறுதல் வெற்றி பெற்றது. கடந்த முறை 2-வது இடம் பிடித்த ஆஸ்திரேலிய அணி இந்த முறை லீக் சுற்றுடன் நடையை கட்டியது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த கெர்ரி பாக்கர் நடத்திய உலக சீரிஸ் போட்டியில் ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக இரண்டாம் தர ஆஸ்திரேலிய அணியே இந்த போட்டியில் கலந்து கொண்டதால் அந்த அணி பெரும் வீழ்ச்சியை சந்தித்தது.
அரைஇறுதி ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் வெஸ்ட்இண்டீஸ் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், இங்கிலாந்து அணி 9 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் முன்னேறின. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் கிளைவ் லாயிட் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணி, இங்கிலாந்தை சந்தித்தது.
முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணி 99 ரன்னுக்குள் 4 விக்கெட்டை இழந்த போதிலும் விவியன் ரிச்சர்ட்ஸ் (ஆட்டம் இழக்காமல் 138 ரன்கள்), காலின்ஸ் கிங் (86 ரன்) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் வெஸ்ட்இண்டீஸ் அணி 60 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்தது. பின்னர் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுக்கு மத்தியில் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் மைக் பிரியர்லி (64 ரன்கள்), ஜெப் பாய்காட் (57 ரன்கள்) முதல் விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் அமைத்து கொடுத்ததை பின்னர் வந்த வீரர்கள் சரியாக பயன்படுத்தி கொள்ளாமல் விரைவில் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். இங்கிலாந்து அணி 51 ஓவர்களில் 194 ரன்னில் ஆல்-அவுட் ஆகி 92 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. வெஸ்ட்இண்டீஸ் அணி உலக கோப்பையை தக்கவைத்து கொண்டதுடன், உலக கிரிக்கெட் அரங்கில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்தது. வெஸ்ட்இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். வெஸ்ட்இண்டீஸ் வீரர் கார்டன் கிரீனிட்ஜ் (253 ரன்கள்) அதிக ரன்னும், இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் மைக் ஹென்ட்ரிக் (10 விக்கெட்) அதிக விக்கெட்டும் எடுத்தனர்.