இளமையாகவே இருக்கிறோம்: எங்கள் அணியினரை வயதானவர்கள் என்று விமர்சிப்பதா?

0
2596

‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களை வயதானவர்கள் என்று விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, நாங்கள் இளமையாகவே இருக்கிறோம்’ என்று ஆல்–ரவுண்டர் பிராவோ கூறினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சை வீழ்த்தி 2–வது வெற்றியை ருசித்தது. இதில் ஷிகர் தவானின் அரைசதத்தின் (51 ரன், 47 பந்து) உதவியுடன் டெல்லி அணி நிர்ணயித்த 148 ரன்கள் இலக்கை சென்னை அணி 19.4 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. ஷேன் வாட்சன் 44 ரன்களும், சுரேஷ் ரெய்னா 30 ரன்களும், கேப்டன் டோனி 32 ரன்களும் (நாட்–அவுட்) எடுத்தனர்.

இந்த ஆட்டத்தில் 3 முன்னணி விக்கெட்டுகளை கைப்பற்றிய சென்னை அணியின் ஆல்–ரவுண்டரான 35 வயதான வெய்ன் பிராவோ நிருபர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சென்னை அணியில் வயதான வீரர்கள் (30 வயதை கடந்த வீரர்கள் 13 பேர் உள்ளனர்) அதிகம் இருப்பது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சற்று ஆவேசத்துடன் பதில் அளித்த பிராவோ கூறியதாவது:–

60 வயது அணி அல்ல

கடந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்று வயதுக்கும், திறமைக்கும் சம்பந்தமில்லை என்பதை நிரூபித்து காட்டினோம். எங்களை பொறுத்தவரை வயது வெறும் நம்பர் தான். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பற்றி மக்கள் பேசும் போதெல்லாமல் வயது விவகாரத்தையும் இழுத்து விடுகிறார்கள். நாங்கள் எங்களது வயதை அறிவோம். ‘கூகுள்’ இணையதளத்தில் தேடிப்பார்த்தாலே அது உங்களுக்கும் தெரியும். அதில் தவறும் ஏதுமில்லை. நாங்கள் ஒன்றும் 60 வயது நிரம்பிய அணி அல்ல. அணியில் 35, 32, 30 வயதுடைய வீரர்கள் தான் இருக்கிறார்கள். நாங்கள் இன்னும் இளமையுடன் தான் இருக்கிறோம். உடலை கட்டுக்கோப்புடன் வைத்து, அனுபவத்தை பயன்படுத்தி விளையாடுகிறோம்.

எந்த விளையாட்டு, எந்த தொடர் என்றாலும் அனுபவத்தை யாராலும் தோற்கடிக்க முடியாது. எங்களது பலம், பலவீனத்தை நன்கு அறிவோம். நாங்கள் மிகவும் சாதுர்யமாக விளையாடுகிறோம். அது தான் மிகவும் முக்கியமான வி‌ஷயம். உலகின் மிகச்சிறந்த கேப்டன் அணியை வழிநடத்துகிறார். அது மட்டுமின்றி எங்கள் கேப்டன் டோனி, நாம் வேகமான அணி அல்ல ஆனால் சாமர்த்தியமான அணியாக இருக்க முடியும் என்பதை அடிக்கடி நினைவூட்டுவார்.

வீரர்கள் கூட்டம் கிடையாது

அணியின் வியூகங்கள் குறித்து கேட்கிறீர்கள். நாங்கள் எந்தவிதமான திட்டமிடலும் செய்வதில்லை. அணி வீரர்களுக்கான ஆலோசனை கூட்டங்களும் நடத்தமாட்டோம். பயிற்சியை முடித்துக் கொண்டு களத்துக்கு வந்து விடுவோம். டோனி உள்பட ஒவ்வொரு வீரர்களுக்கும் தனித்தனியான ஸ்டைல் இருக்கிறது. ஆட்டத்தின் போக்கை கவனித்து விட்டு, சூழ்நிலைக்கு தக்கபடி எங்களை மாற்றிக்கொண்டு விளையாடுகிறோம். இதில் தான் எங்களது அனுபவம் வெளிப்படுகிறது.

இந்த ஆட்டத்தில், சரியான லைனில் ஸ்டம்பை குறி வைத்து பவுலிங் செய்யும்படி டோனி என்னை கேட்டுக்கொண்டார். அதன் படியே பந்து வீசியதற்கு பலன் கிடைத்தது. வழக்கமாக நான் வேகத்தை குறைத்தபடி அதிகமாக பந்து வீசுவேன். பந்து வீச்சில் நிறைய வித்தியாசத்தை காட்டுவேன். யார்க்கராகவும் போடுவேன். ஆனால் அந்த மாதிரியான பந்து வீச்சுக்கு ஏற்ற ஆடுகளமாக இது இல்லை.

இவ்வாறு பிராவோ கூறினார்.

டோனி கருத்து

சென்னை கேப்டன் டோனி கூறுகையில், ‘முதல் இன்னிங்சில் நாங்கள் எதிர்பார்த்ததை விட பந்து அதிகமாக சுழன்று திரும்பியது. 2–வது இன்னிங்சின் போது பனிப்பொழிவின் தாக்கம் நாங்கள் பேட்டிங் செய்ய எளிதாக இருந்தது. எங்களது பவுலர்கள் அபாரமாக செயல்பட்டு அவர்களை 147 ரன்னில் கட்டுப்படுத்தினர். வேகப்பந்து வீச்சாளர் நிகிடி (தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்) தொடரின் தொடக்கத்திலேயே காயத்தால் விலகியது எங்களுக்கு மிகப்பெரிய இழப்பாகும்

நாங்கள் ஒரு போதும் பீல்டிங்கில் கச்சிதமான அணியாக இருந்ததில்லை. அதே நேரத்தில் மோசமாக இல்லாமல் பாதுகாப்பான பீல்டிங் இருக்கிறது. பீல்டிங்கில் கொஞ்ச ரன்களை நாங்கள் விட்டுக்கொடுத்தாலும், அந்த குறையை பேட்டிங் மற்றும் பந்து வீச்சு மூலம் நிவர்த்தி செய்கிறோம்’ என்றார்.

பாண்டிங் பேட்டி

டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கிபாண்டிங் கூறுகையில், ‘தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் இன்னும் வேகமாக ரன்கள் எடுத்திருக்க வேண்டும். புதிதாக வரும் பேட்ஸ்மேன்கள் அதுவும் ‘பவர்–பிளே’க்கு பிறகு வந்த வேகத்திலேயே அதிரடியாக ரன் எடுப்பது எளிதான காரியம் அல்ல. அதே போல் மும்பை அணிக்கு எதிராக ஆடியது போன்று ஒவ்வொரு முறையும் ரிஷாப் பான்டிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது. மற்ற பேட்ஸ்மேன்களும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here