இன்று உலக சுற்று சூழல் தினம்

0
4364

உலக சுற்று சூழல் தினம் இன்று (5ம் தேதி) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள நகராட்சிப் பகுதிகளில் இன்று மட்டும் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தனியாக பிரித்து வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. 1972ம் ஆண்டு முதல் ஜூன் 5ம் தேதி உலக சுற்று சூழல் தினமாக ஐ.நா சபையால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சுற்றுசூழலை பாதுகாக்க தவறியதன் விளைவை இன்றைய தினம் மனித குலம் சந்தித்து வருகிறது. ரசாயனக் கழிவுகள், குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகம் என பல்வேறு காரணிகளால் சுற்றுச் சூழல் மாசடைகிறது. நகரப்பகுதிகளில் குவியும் குப்பைகளும், கழிவுகளும் மனிதர்களின் வாழ்க்கைத் தரத்திலும் மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன.

வீடுகளில் தினமும் சேரும் குப்பைகள் முறையாக அழிக்கப்படாமல் உள்ளது கவனத்துக்குரியதாகும். மத்திய, மாநில அரசுகள் திடக்கழிவு மேலாண்மை, தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தினாலும் உள்ளாட்சி அமைப்புகள் இதனை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. திடக்கழிவு மேலாண்மையில் போதிய பயிற்சியின்மை, ஊழியர்கள் பற்றாக்குறை, தொழில்நுட்ப வசதியின்மை என பல்வேறு குறைபாடுகள் உள்ளன. ஒரு சில மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும் குறிப்பிட்ட சில பகுதி கழிவுகளை உரமாக தயாரித்து வழங்குகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு ஜூன்  5ம் தேதி நகராட்சிப் பகுதியில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்து வாங்க திட்டமிட்டுள்ளனர். ஆனால் இதற்கான எவ்வித அடிப்படை வசதிகளும், அறிவிப்புகளும் வெளியிடாத நிலையில் எப்படி சாத்தியமாகும் என சூழலியல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

குமரி மாவட்டத்தில் நான்கு நகராட்சிகள் உள்ளன. இதில் பரப்பளவும், மக்கள் தொகையும் குறைந்தது பத்மநாபபுரம் நகராட்சி. 6.47 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட இந்நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. புகழ்பெற்ற அரண்மனை அமைந்துள்ள இங்கு வெளிநாட்டு சற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்கின்றனர். 125 க்கும் குறைவான தெருக்களையும், 7 ஆயிரத்துக்கும் குறைவான வீடுகளையும் கொண்ட இந்நகராட்சியில் மக்கள் தொகை கணக்கின் படி 78 சுகாதார ஊழியர்கள் இருக்க வேண்டும். ஆனால் 42 ஊழியர்கள் பணியிடம் அனுமதிக்கப்பட்டதில் 4 இடங்கள் காலியாக உள்ளது. 12 ஊழியர்கள் அலுவலகம், குடிநீர், தெருவிளக்கு பராமரித்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இது தவிர பிற பணியாளர்களில் சிலர் நோய் குறைபாடு காரணமாக அடிக்கடி விடுமுறை எடுக்கின்றனர். இதனால் தினசரி சுகாதாரப் பணியில் குறைவான ஊழியர்களே ஈடுபடும் நிலைமை உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இந்நகராட்சிக்கு குப்பைகளை எடுத்துச் செல்ல வாகன வசதி அதிகமாகவே உள்ளது. ஆனால் நகர் பகுதியில் பல இடங்களில் வைக்கப்பட்ட குப்பைத் தொட்டிகள் சேதமடைந்து உபயோகப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் குறிப்பிட்ட இடம் என்றில்லாமல் கண்ட, கண்ட இடங்களில் குப்பையை காண முடிகிறது. குப்பையில்லா நகராட்சியாக  இதனை மாற்ற நகராட்சி நிர்வாகம் திட்டமிடாமலே உள்ளது.

நகர்பகுதியில் பிளாஸ்டிக் உபயோகம் அதிகரித்துள்ள நிலையில் அவற்றை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறது. இது மட்டுமல்லாமல் நகராட்சி உரக்கிடங்கில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் நடந்து வரும் இயற்கை உரத் தயாரிப்பு பணி முடியாமல் மாதக்கணக்கில் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. உரக்கிடங்கில் இயற்கை உரத்தயாரிப்பு தொடங்குவதற்கு இன்னும் பல மாதம் ஆகும் என தெரிகிறது. ஆனால் அதற்கு முன்னோட்டமாக நகர்ப்பகுதியில் மக்கும் குப்பைகளையும், மக்கா குப்பைகளையும் பிரித்து வாங்குவதற்கான நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என சூழலியல் ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.

இதற்காக நகர்பகுதியில் உள்ள குடியிருப்பு நல அமைப்புகள், வர்த்தக அமைப்புகள், பொது நல சங்கங்கள், சமுதாய நல அமைப்புகளை அழைத்து பேசி தீர்வு காணலாம். குறைந்தபட்சம் குறிப்பிட்ட சில வார்டுகளையாவது பிளாஸ்டிக் இல்லாத பகுதி என அறிவித்து குப்பைகளை சேகரிக்கலாம். இதற்கு தேவையான இடங்களில் சிறிய அளவிலான குப்பைத் தொட்டிகளை அமைத்தால் நன்றாக இருக்கும். இதற்கான முயற்சியில் நகராட்சி நிர்வாகம் இறங்கினால் நகரமும் சுத்தமாக இருக்கும். சுகாதார பிரச்னைகளும் இருக்காது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here