திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு ஆன்-லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்யப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். முதல் முறையாக தீபத் திருவிழாவுக்கான டிக்கெட் ஆன்-லைனில் விற்பனை செய்யப்படுகிறது.
டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம்
தீப விழாவின் ஆன்-லைன் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் எண் கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணிமுதல் www.tntemple.org என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம்.
கட்டண விவரம்
திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவின் ஆன்-லைன் முன்பதிவுக்கான கட்டண விவரம் அறிவிக்கப்பட்டுள்ளன. பரணி தீபம் தரிசனம் காண நபர் ஒன்றுக்கு ரூ.500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மகா தீபத்துக்கான தரிசனத்துக்கும் நபர் ஒன்றுக்கு ரூ.500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பரணி மற்றும் மகா தீபத்துக்கு தலா 500 பேர் அனுமதிக்கப்படுவர் என அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். மகா தீபத்தை காண ரூ.600 கட்டணத்தில் 100 பேர் அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா, கடந்த 23-ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக, வரும் 2-ம் தேதி காலை பரணி தீபம், மாலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இவ்விழாவில் பங்கேற்க, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்துகொள்வர். இதனையொட்டி, ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.