திருவண்ணாமலை: ”திருவண்ணாமலை மஹா தீபத்தன்று, பக்தர்கள் மலை ஏற, தடை விதிக்கப்பட்டுள்ளது,” என, கலெக்டர் கந்தசாமி கூறினார்.
தீப திருவிழா ஏற்பாடுகள் குறித்து, கோவில் இணை ஆணையர் ஜெகன்நாதன் மற்றும் கோவில் ஊழியர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள் ஆகியோருடன், கலெக்டர் கந்தசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தீப திருவிழாவிற்கு, 7.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. 16 தற்காலிக பஸ் ஸ்டாண்ட்கள் அமைக்கப்பட உள்ளன. இதில், ஒன்பது பஸ் ஸ்டாண்ட்களில் இருந்து, கிரிவலப்பாதை வரை, முதியவர்கள், குழந்தைகள் செல்ல, இலவசமாக பஸ் இயக்கப்படும். கூடுதலாக, 700 கார்கள் நிற்கும் அளவிற்கு, ஆறு கார் பார்க்கிங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 9,400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு, தங்கும் இடம், உணவு ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மஹா தீபத்தன்று, அதிகளவு பக்தர்கள் மலை ஏறும்போது நெரிசல் ஏற்படுகிறது. அவர்களுக்கு மருத்துவ வசதி கிடைப்பதில், சிரமம் ஏற்படுகிறது. மலையில் தீபம் ஏற்றும் நேரங்களில், மர்ம ஆசாமிகள் மரங்களுக்கு தீ வைக்கின்றனர். இதை தவிர்க்க, இந்த ஆண்டு முதல், அன்று ஒரு நாள் மட்டும் மலை ஏற தடை விதிக்கப்படுகிறது. அன்னதானம் செய்யும்போது, 30 முதல், 40 சதவீத உணவு வீணாகிறது. அதை தவிர்க்க, அன்னானம் செய்ய விரும்புவோர், மாவட்ட நிர்வாகத்திடம் பணமாக வழங்கலாம். சுய உதவி குழுவினரை கொண்டு, தரமான உணவு சமைக்கப்பட்டு, கிரிவலப்பாதையில், ஏழு இடங்களில் காலை, மாலை, இரவு என, மூன்று வேளை உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தீப திருவிழாவில், 300 வனத்துறை பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். தீப திருவிழாவிற்கு ஒதுக்கப்படும் நிதி, தீப திருவிழா அடிப்படை வசதிகள் செய்வதற்கு மட்டுமே, நகராட்சி நிர்வாகம் பயன்படுத்த வேண்டும். வளர்ச்சி பணிக்கு பயன்படுத்தக் கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீப விழா ஏற்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ள வசதியாக, முதல் முறையாக மொபைல்போன் ஆப் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.