சென்னை: நாங்களா அதிக சம்பளம் கேட்கிறோம்… தயாரிப்பாளர்கள்தான் நடிகரின் மார்க்கெட்டை வைத்து சம்பளத்தை நிர்ணயிக்கிறார்கள் என நடிகரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் கூறினார்.
நடிகர்கள் அதிக சம்பளம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது. ரூ.25 கோடிக்கு வியாபாரம் ஆகும் ஒரு படத்தில், கதாநாயகன் ரூ.40 கோடி சம்பளம் கேட்பதாக ‘ஃபெப்சி’ தலைவர் ஆர்.கே.செல்வமணி குற்றம் சாட்டினார். நடிகர்கள் சம்பளத்தை குறைத்தால், தயாரிப்பு செலவை குறைக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
இந்தநிலையில், சென்னையில் நேற்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவருமான விஷால், ஏழை மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் கல்வி உதவி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நடிகர்கள் அதிக சம்பளம் கேட்பதாக விமர்சிக்கப்படுகிறது. எந்த நடிகரும் தனக்கு அதிக சம்பளம் வேண்டும் என்று கேட்பது இல்லை. தயாரிப்பாளர்கள்தான் நடிகர்களின் மார்க்கெட் நிலவரத்துக்கு ஏற்ற மாதிரி சம்பளத்தை முடிவு செய்து கொடுக்கிறார்கள்.
ஃபெப்சி தொழிலாளர்கள் சிலர் படப்பிடிப்பை நிறுத்தியதால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. படப்பிடிப்புகளை நிறுத்த தயாரிப்பாளருக்கு மட்டும்தான் உரிமை உண்டு. வேறு யாரும் படப்பிடிப்பை நிறுத்த முடியாது.
தற்போது தயாரிப்பாளர்கள் விரும்பினால் ‘ஃபெப்சி’யில் இல்லாதவர்களை வைத்து படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால்தான், சினிமாத்துறை தழைக்கும்.
யார் வயிற்றிலும் அடிப்பது தயாரிப்பாளர்கள் நோக்கம் அல்ல. ஆனாலும் தயாரிப்பாளர்கள் நலன் பாதுகாக்கப்படவேண்டும். ‘பெப்சி’யுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும்,” என்றார்.