சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.0.’ ரூ.450 கோடி வரை செலவிடப்பட்டு உள்ளது. 2010–ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும், வில்லனாக இந்தி நடிகர் அக்ஷய்குமாரும் நடித்துள்ளனர்.
கடந்த வருடம் தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டனர். தொழில் நுட்ப பணிகள் தாமதமானதால் ஜனவரி மாதத்துக்கு தள்ளி வைத்தனர். பின்னர் ஏப்ரல் 27-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் அன்று படம் வெளியாகாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
2.0 படத்துக்கு பதில் ரஜினிகாந்தின் காலா படம் அதே நாளில் வெளியாகிறது. 2.0 படம் எப்போது வெளியாகும் என்ற தகவல் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. தற்போது இந்த படம் சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ந்தேதிக்கு வெளியாக இருக்கிறது என்றும் அதை விட்டால் தீபாவளிக்கு தள்ளிப்போகும் என்றும் கூறப்படுகிறது.
2.0 படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி டி.வி. உரிமை ரூ.110 கோடிக்கு விலை போய் இருப்பதாக கூறப்படுகிறது. எந்த இந்திய படமும் இவ்வளவு தொகைக்கு விற்கப்படவில்லை.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் டீசர் இணையதளங்களில் லீக் ஆகியுள்ளது. டீசர் முடிவில் ரஜினிகாந்த் கண்ணாடியை இறக்கி குக்கூ என கூறுவது போல் காட்சி இடம் பெற்றுள்ளது.
அதிகாரப்பூர்வ வெளியீடுக்கு முன்பே 1.27 நிமிடம் கொண்ட டீசர் வெளியாகி உள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.