சென்னை,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக 47 தொழிற்சங்கங்களுடன் போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சென்னை குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் 11 முறையும், சென்னை பல்லவன் இல்லம், தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில் 10 முறையும் பேச்சுவார்த்தை நடந்தது.இந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் முடிவுகள் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந் தது.
போக்குவரத்து ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் இருந்து 2.35 காரணி மடங்கு ஊதிய உயர்வு கொடுக்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.ஆனால் தொழிற்சங்கத்தினர் 2.57 காரணி மடங்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர். இதை வலியுறுத்தி கடந்த மாதம் 14, 15 ஆகிய தேதிகளில் காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த சூழ்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களின் 13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை குரோம்பேட்டையில் நேற்று நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், நேற்று மாலை திடீரென முன்னறிவிப்பின்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், பயணிகள் கடும் அவதி அடைந்தனர். கோயம்பேடு, பாரிமுனை, வடபழனி, எண்ணூர் உள்பட அனைத்து பஸ் நிலையங்களிலும், பஸ்கள் இயக்கப்படாமல் அணிவகுத்து நின்றன. பஸ்சில் ஏறிய பயணிகளிடம், பஸ்கள் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதேபோல தமிழ்நாடு முழுவதும் பஸ்கள் இயங்குவது நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் ஊழியர்களை கேட்டுக்கொண்டார். இருப்பினும், வேலை நிறுத்தமானது தொடர்ந்து நீடித்து வருகிறது. சென்னையில் 70 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை. வெளியூர் செல்லும் பேருந்துகள் இயங்காததால், வெளியூர் செல்லும் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். திருச்சியில் 99 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை. அரியலூர், தஞ்சை, திண்டுக்கல்,திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, உட்பட தமிழகம் முழுவதும் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.