பருவகால மாற்றத்தின்போது தாக்கும் மலேரியா, காலரா, சிக்குன்குனியா போன்ற நோய்களின் பட்டியலில் டெங்கு காய்ச்சல் முதல் இடத்தில் உள்ளது.
சமீபத்தில் தமிழகம், கேரள மாநிலங்கள் உள்பட இந்தியாவின் பல பகுதிகளில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று மாதவர்ததைச் சேர்ந்த 7 வயதான குழந்தைகள் இந்த டெங்கு காய்ச்சலால் பலியாகி உள்ளனர். தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் தினமும் 20 முதல் 30 பேர் டெங்கு பாதிப்புகளால் சேர்க்கப்பட்டு வருகின்றனர் என கூறினார்.
1827-28-ம் ஆண்டில் கரீபியனில் நிகழ்ந்த நோய் தொற்றை இசுப்பானிய கரீபியர்கள் ‘டெங்கு’என அழைத்தனர். அதன்பின்பு, 1906-ம் ஆண்டில் இந்த டெங்கு நோய் ‘ஏடிஸ்’ கொசுவால் ஏற்படுவதாக கண்டறியப்பட்டது.
இந்த ‘ஏடிஸ்’ கொசு பெரும்பாலும் நல்ல நீரில் முட்டையிட்டு தான் இனப்பெருக்கத்தை செய்கின்றன. அவ்வாறு உருவாகும் இந்த வகை கொசுக்கள் மனிதனை கடிக்கும்போது அந்த நபர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகிறார்.
அதேபோல், டெங்கு காய்ச்சல் உள்ளவரை கடித்த ஏடிஸ் கொசு ஆரோக்கியமானவர்களை கடிக்கும்போது அவருக்கும் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த வகையில் தான் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. தண்ணீர், காற்று, எச்சில், இருமல், தும்மல் மற்றும் தொடுதல் மூலமாக இந்த நோய் பரவுவதாக பலர் தவறாக நினைக்கிறார்கள். அப்படி இந்த நோய் பரவுவது கிடையாது. இதனால் சிறுவர்கள் கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் பெரும்பாலும் பாதிக்கப்படுகிறார்கள்
1980 முதல் 2010-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட 30 ஆண்டுகளில் டெல்லி, அரியானா, பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்த நோயின் தாக்கம் அதிகளவில் இருந்தது. கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து டெங்கு காய்ச்சல் நோயின் தாக்கம் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தை ஆட்டிப் படைக்கின்றன. 27 குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னை எழும்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ளனர்.
பொதுவாக பருவமழை காலங்களில் தான் ‘ஏடிஸ்’ கொசுக்கள் சுதந்திரமாக இனப்பெருக்கம் செய்து, நோய் பரப்பும் வேலையில் மும்முரமாக ஈடுபடுவதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வந்தனர். 5-6 நாட்களுக்கு ஒரு நோய்த்தொற்று கொசு கடித்தால் மனிதனுக்கு நோய் உருவாகிறது
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அந்த நிலை மாறிவிட்டது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இதன் கோரத்தாண்டவம் ஆண்டு முழுவதும் ஆட்டிப் படைக்கிறது.
கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து டெங்கு காய்ச்சலினால் எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற தகவல் மத்திய அரசின் சுகாதாரத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் 2010-ம் ஆண்டில் இருந்து ஆண்டு வாரியாக 2051, 2501, 12826, 6122, 2804, 4535, 2531(2016-ம் ஆண்டு வரை) பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு 2017 ஆம் ஆண்டு தான் அதிகாளவில் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மொத்தம் 23,294 பேர் பாதிக்கபட்டனர். இதில் மரணம் 65 பேர். இந்த ஆண்டு செப்டம்பர் 30 ந்தேதி வரை 2,175 பேர் பாதிக்கபட்டு உள்ளதாக கூறபடுகிறது. மேலும் இது வரை 5 பேர் பலியானதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து இதுவரை டெங்கு காய்ச்சலினால் தமிழகத்தில் 104 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசின் சுகாதாரத்துறைக்கு டெங்கு காய்ச்சல் நோய் தற்போது பெரும் சவாலாக இருக்கிறது. நோய் பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், ஒவ்வொரு நாளும் டெங்குவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இதன் அறிகுறிகள் :
அதிக காய்ச்சல் ; கடுமையான தலைவலி , கண்களுக்கு பின்னால் வலி, தசை மற்றும் மூட்டு வலி, சுவை இழப்பு மற்றும் பசியின்மை, மார்பு மற்றும் மேல் மூட்டுகளில் மீது சொறி போன்ற தோற்றம், குமட்டல் மற்றும் வாந்தி.
இது குறித்து சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
டெங்கு குறித்து பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் கடந்த ஆண்டைகாட்டிலும் டெங்கு தாக்கம் குறைந்து உள்ளது. டெங்குவால் 98 சதவீத நபர்கள் குணமடைந்தாலும் 2 சதவீதம் பேர் பாதிக்கப்படுகின்றனர். கொசு உற்பத்தியை கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் 48 மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என கூறினார்.
டெங்கு எச்சரிக்கை:-
வீடு உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
காய்ச்சல் 3 நாட்களுக்கு மேல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
தொடர்ந்து காய்ச்சல் இருக்கும் குழந்தைகளுக்கு விடுமுறை அளிக்க பள்ளி நிர்வாகம் முன்வரவேண்டும்.
டெங்கு காய்ச்சலை தடுக்க பள்ளியின் ஒத்துழைப்பும் அவசியமாகிறது.
பாரசிட்டமால் மருந்து கொடுக்கலாம்; ஈரத்துணியை வைத்து உடல் வெப்பத்தை குறைக்கலாம்.
தொடர்ந்து தலைவலி, உடல்சோர்வு, வயிற்றுவலி, வாந்தி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
3 நாட்களுக்கு மேல் அபாய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக ரத்த பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
உடனடியாக மருத்துவமனைக்கு வந்தால் காய்ச்சல் பாதிப்பில் இருந்து மீளலாம்.
அல்லது 7 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டால் காய்ச்சல் பாதிப்பில் இருந்து மீள்வது சிக்கலாகிவிடும்.