டிக்கெட் எடுக்கக்கூறி நடுவழியில் இறக்கிவிடப்பட்ட மாணவ, மாணவிகள்

0
3496

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டிலிருந்து வந்தவாசி செல்லும் வழியில் கோழிப்புலியூர் கூட்ரோடு பகுதியில் கல்யாணபுரம், மேலச்சேரி, கோழிப்புலியூர், கோட்டுப்பாக்கம், ரகுநாதசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்கள் உள்ளன. இந்த பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் சேத்துப்பட்டு மற்றும் வந்தவாசியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.

இவர்கள் கோழிப்புலியூர் கூட்ரோட்டிலிருந்து தினமும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். நேற்று காலையும் இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது காஞ்சீபுரத்திலிருந்து திருவண்ணாமலை வழியாக சேலத்திற்கு செல்லும் அரசு பஸ் சேத்துப்பட்டு நோக்கி செல்வதற்காக வந்தது. பஸ் கூட்ரோட்டில் நின்றதும் சேத்துப்பட்டு வரும் மாணவ, மாணவிகள் முண்டியடித்து ஏறினர். பின்னர் பஸ் புறப்பட்டது.

அப்போது கண்டக்டர் மாணவ, மாணவிகளிடம் டிக்கெட் எடுக்கும்படி கூறியுள்ளார். அதற்கு அவர்கள் தாங்கள் வைத்துள்ள பஸ் பாஸை காண்பித்துள்ளனர். அதனை அனுமதிக்க முடியாது என்றும் இது எக்ஸ்பிரஸ் பஸ், இதில் பஸ் பாஸ் வைத்துள்ளவர்கள் வரமுடியாது. டிக்கெட்தான் எடுக்க வேண்டும். இல்லையென்றால் இறங்குங்கள் என கூறினார்.

ஆனால் மாணவ, மாணவிகள் டிக்கெட் எடுக்காததால் பஸ்சை நிறுத்த கண்டக்டர் ‘விசில்’ கொடுத்தார். இதனால் நடுவழியில் பஸ்சை டிரைவர் நிறுத்தினார். அதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளை கீழே இறக்கிவிட்டு பஸ் புறப்பட்டு சென்றது.

அதன்பின் அந்த மாணவ, மாணவிகள் வேறு பஸ்சில் ஏறி கோழிப்புலியூர் கூட்ரோட்டிற்கு வந்து அங்கு காத்திருந்த மற்ற மாணவ, மாணவிகளிடம் கூறினர்.

கொதிப்படைந்த அனைத்து மாணவ- மாணவிகளும் திடீரென கோழிப்புலியூர் கூட்ரோட்டில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் வந்த வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பொற்செழியன், தேசூர் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சேத்துப்பட்டு இன்ஸ்பெக்டர் ஜோதி மற்றும் போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் சேத்துப்பட்டு தாசில்தார் அரிதாஸ், பெரணமல்லூர் ஒன்றிய பா.ம.க.தலைவர் ரவி ஆகியோரும் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கூடுதல் டவுன் பஸ்களை இயக்க வந்தவாசி, போளூர், சேத்துப்பட்டு ஆகிய ஊர்களில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனை மேலாளர்களிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். அவர்களை போலீசாரும் அதிகாரிகளும் சேத்துப்பட்டு மற்றும் வந்தவாசி சென்ற பஸ்களில் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here