நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் ரெப்போ ரேட் எனப்படும் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்தை 4.4% இருந்து 4% ஆக குறைப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு தொழில்துறைகள் முடங்கியதால் நாட்டின் பொருளாதாரமும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது.
இதனை அடுத்து பாதிப்படைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் பொதுமக்கள், மற்றும் தொழில்துறைகள் பயன்பெரும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் நாட்டின் பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்ய ரிசர்வ் வங்கி இன்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொருளாதார சூழ்நிலைகளை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கவனித்து வருவதாகவும் கொரோனாவால் உலகம் முழுவதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ரெப்போ வட்டி விகிதம்:
நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், மக்கள் கடன்களை பெற வசதியாக ரெப்போ வட்டி விகிதத்தை 4.4% இருந்து 4% ஆக குறைக்கப்படுகிறது. இந்த குறைக்கப்பட்ட வட்டியில் வங்கிகள் இனி கடன் வழங்கும். ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.35% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி குறைப்புகள் மூலம் வீடு, வாகனக் கடன்களின் மீதான வட்டி குறையும் என தெரிவித்தார்.
இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் உலக வர்த்தகம் 13% முதல் 32% வரை குறைய வாய்ப்பு இருப்பதாக சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு காரணமாக EMI எனப்படும் கடன் தவணைகளை செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவித்தார்.
வேளாண்துறை:
இந்த சூழலில் வேளாண் சாகுபடி வளர்ச்சி அடைந்துவருவது நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளதாகவும், நாட்டில் மானாவரி சாகுபடி பரப்பரளவு 44% உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். ஏப்ரல் மாதம் உணவுப் பொருட்களின் பண வீக்கம் அதிகரித்துள்ளதோடு உணவு பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதாக கூறிய அவர் அடுத்த சில மாதங்களில் பருப்புகளின் விலை அதிகரிக்கலாம் என தெரிவித்தார்.
உள்நாட்டின் தொழில்துறை உற்பத்தி கடந்த மார்ச் மாதம் 17% குறைந்துள்ளதாக கூறிய அவர், உள்நாட்டு உற்பத்தி நடப்பாண்டில் வீழ்ச்சியை சந்திக்கும் எனவும் தெரிவித்தார். GDP சிறிதளவில் கூட வளர்ச்சி ஏற்படும் சூழ்நிலை இந்தாண்டு இல்லை என கூறிய அவர், கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் தொழில்துறை உற்பத்தி, மின்சாரம் நுகர்வு, எரிபொருள் நுகர்வு குறைந்துள்ளாதாகவும் தெரிவித்தார். மேலும் சந்தை பொருளாதாரத்தை மேம்படுத்த ரிசர்வ் வங்கி கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பிரச்னையை மேம்படுத்தவும், மாநிலங்களுக்கான நிதி பிரச்னையை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சலுகை வசதியில் கடன் வசதி அளிக்கப்படும்எனவும், சிறு தொழில்களுக்கு கடன் வழங்க 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், இந்தியாவில் 487 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி கையிருப்பில் உள்ளதாகவும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.