கொச்சி
கேரளத்தில் வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட கொச்சி சென்ற பிரதமர் மோடி, மோசமான வானிலை காரணமாக வான் வழி ஆய்வை மேற்கொள்ள முடியவில்லை.
கேரளத்தில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. இதனால் நிலச்சரிவு மற்றும் வெள்ளநீரில் சிக்கி 324 பேர் பலியாகிவிட்டனர். எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக இருப்பதால் மக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.
100 ஆண்டுகளில் இல்லாத மழை வெள்ளத்தை கேரளம் சந்தித்துள்ளது. 80 அணைகள் நிரம்பியதால் அவை திறக்கப்பட்டன. 2.2 லட்சம் பேர் 1500-க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் திருவனந்தபுரத்துக்கு வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அங்கிருந்து கொச்சி சென்ற அவர் ஹெலிகாப்டர் மூலம் வெள்ள பாதிப்புகளை ஆய்வு பணிகளை ஆய்வு செய்யத் திட்டமிட்டிருந்தார். திட்டமிட்டபடி ஹெலிகாப்டரிலும் புறப்பட்டார். ஆனால் கன மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டு ஹெலிகாப்டர் திரும்பி விட்டது.
கொச்சியில் ஆளுநர் சதாசிவம், முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். பின்னர் கேரளாவுக்கு இடைக்கால நிவாரண நிதியாக ரூ.500 கோடி வழங்கப்படும் என அறிவித்து உள்ளார்.