ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி

0
3215
11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா கடந்த 7-ந் தேதி தொடங்கியது. இதில் கலந்து கொண்டுள்ள 8 அணிகள் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் மற்ற அணிகளுடன் தலா 2 முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். சென்னை அணி உள்ளூரில் 7 லீக் ஆட்டங்களில் விளையாடும்.
இந்த போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணிக்கு நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற  சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, தனது அணி முதலில் பந்து வீசும் என்று அறிவித்தார். இதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.
ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய கொல்கத்தா அணி, சென்னை அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. துவக்க வீரர் லின் ( 22 ரன்கள்), சுனில் நரைன் ( 12 ரன்கள்) ஆட்டமிழந்தனர். அதிரடி காட்டி மிரட்டிய உத்தப்பா 16 பந்துகளில் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் உட்பட 29 ரன்கள் எடுத்து இருந்த போது சுரேஷ் ரெய்னாவின் துல்லிய த்ரோவில் ரன் அவுட் ஆனார். ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், கொல்கத்தா அணி சீரான வேகத்தில் ரன் எண்ணிக்கையை உயர்த்தியது.
7-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய ரஸ்ஸல், சென்னை அணியின் பந்து வீச்சை சிதறடித்தார். களத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய ரஸ்ஸல் 11 சிக்சர்களுடன் 36 பந்துகளில் 88 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி நேர அதிரடியால் கொல்கத்தா அணி எதிர்பார்க்கப்பட்ட ரன்களை விட அதிகம் சேர்த்தது. நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் சேர்த்தது. சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக வாட்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஷேன் வாட்சன் மற்றும் ராயுடு ஆகியோர் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் சென்னை அணி 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்களை குவித்தது. இந்நிலையில் அணியின் ஸ்கோர் 75 ஆக இருந்த போது டாம் குர்ரான் வீசிய பந்தில் ரின்குசிங்கிடம் கேட்ச் ஆகி வாட்சன் ஆட்டமிழந்தார். வெறும் 19 பந்துகளில் 3 சிக்சர், 3 பவுண்டரி என 42 ரன்கள் குவித்து அவர் ஆட்டமிழந்தார். பின்னர் ராயுடு 39 ரன்கள், ரெய்னா 14 ரன்களில் வெளியேற கேப்டன் தோனியுடன் சாம் பில்லிங்ஸ் இணைந்தார். ஒரு முனையில் கேப்டன் தோனி நிதான ஆட்டத்தினை வெளிபடுத்த மறுமுனையில் பில்லிங்ஸ் பந்தை அவ்வபோது சிக்ஸர், பவுண்டரி என விரட்டினார்.
அணியின் ஸ்கோர் 155 ஆக இருக்கையில் ஃபினிஷர் தோனி(25 ரன்கள்) பியூஸ் சாவ்லா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இருந்தாலும் மறுமுனையில் பில்லிங்ஸின் அதிரடி ஆட்டம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினரை கலங்கடிக்க வைத்தது. இந்நிலையில் 23 பந்துகளில் 56 ரன்கள் எடுத்த பில்லிங்ஸ் 18.3 வது ஓவரில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இதன் பிறகு அதிரடி ஆட்டக்காரர்  பிராவோ-ஜடேஜா ஜோடி களத்தில் இருக்க கடைசி 6 பந்துகளில் சென்னை அணி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி 1 பந்து மீதமிருக்க ஜடேஜா சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். இதன் மூலம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல் வெற்றி பெற்றது.
நாளை நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை டெல்லி டேர்டெவில்ஸ் அணி ஜெய்ப்பூரில் எதிர்கொள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here