அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில், ரூ.12 லட்சத்தை எலி ஒன்று கடித்து குதறி நாசம் செய்துள்ளது.
கவுகாத்தி டின்சுகியா மாவட்டத்தில் உள்ள லாய்புலி பகுதி அருகே அமைந்துள்ள எஸ்பிஐ வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தில் கடந்த மே 19-ம் தேதி பணம் நிரப்பப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு அடுத்த நாளே இயந்திரம் வேலை செய்யவில்லை என வங்கி நிர்வாகத்திற்கு புகார் வந்துள்ளது. இதனால் கடந்த ஒரு மாதமாக, நிரப்பப்பட்ட பணத்துடன் ஏ.டி.எம் இயந்திரம் மூடப்பட்டு இருந்துள்ளது.
அதனை சரி செய்வதற்காக கடந்த ஜூன் 11-ம் தேதி வங்கி நிர்வாகம் ஊழியர்களை அனுப்பியுள்ளது. அங்கு சென்ற ஊழியர்கள் இயந்திரத்தினை பிரிக்கும்பொழுது, உள்ளிருந்த 12 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் அனைத்தும் எலியினால் சிதைக்கப்பட்டு சிறு சிறு துண்டுகளாக வெளியில் கொட்டியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக வங்கி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர் வங்கி நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.