எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: 94.74 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி

0
2144

திருவண்ணாமலை,

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டத்திற்கான தேர்வு முடிவுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் 16 ஆயிரத்து 579 மாணவர்களும், 16 ஆயிரத்து 329 மாணவிகளும் என மொத்தம் 32 ஆயிரத்து 908 பேர் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதினர். இதில் 15 ஆயிரத்து 453 மாணவர்களும், 15 ஆயிரத்து 724 மாணவிகளும் என மொத்தம் 31 ஆயிரத்து 177 பேர் தேர்ச்சி பெற்றனர். அதன்படி மாணவர்கள் 93.21 சதவீதமும், மாணவிகள் 96.29 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்த மாணவ- மாணவிகளின் தேர்ச்சி 94.74 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு 92.16 சதவீதத்தில் இருந்து 2.58 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மாநில அளவில் திருவண்ணாமலை மாவட்டம் 22-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 26-வது இடத்தை பிடித்திருந்தது. அதில் இருந்து 4 இடங்கள் இந்தாண்டு முன்னேறி உள்ளது. நமது மாவட்டத்தில் உள்ள 489 பள்ளிகளில் 192 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 152 பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தேர்ச்சியை பெற்றிருந்தது.

319 அரசு பள்ளிகளில் 87 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 62 பள்ளிகள் மட்டும் 100 சதவீத தேர்ச்சியை பெற்றிருந்தது.

அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில் மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டம் 15-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டை விட (22-வது இடம்) 7 இடங்கள் முன்னேறி உள்ளது. தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ- மாணவிகளுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு உடனடி மறுதேர்வுக்கு தயார் செய்யப்படுவார்கள்.

மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த பாடுபட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்த கல்வியாண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தை முதல் 10 இடத்திற்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here