இவைகள் உங்க உடம்புல நல்ல கொழுப்பு கம்மியா இருக்கு என்பதை தான் சொல்கிறது தெரியுமா?

0
3299

பொதுவாக கொழுப்பு என்று வரும் போது, பலரும் அது ஆரோக்கியத்தைக் கெடுக்கக்கூடியது என்று தான் நினைக்கிறோம். ஆனால் உடலுக்கு நன்மை விளைவிக்கும் சில நல்ல கொழுப்புக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு அவசியம். அதில் ஒன்று தான் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள். இந்த வகை கொழுப்புக்களானது பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களாகும். இவை ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியமானவையாகும்.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், மூளையின் செயல்பாடு, வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது. இவைகள் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களாகும். இந்த கொழுப்பு அமிலங்களை உடலால் தானாக உற்பத்தி செய்ய முடியாது. எனவே இந்த கொழுப்பு அமிலங்களை உணவுகளின் மூலம் மட்டுமே பெற இயலும். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உணவுகளில் இருந்து மட்டுமின்றி, சில சப்ளிமெண்ட்களின் மூலமும் கிடைக்கும்.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் என்றதும் நமக்கு நினைவிற்கு வருவது மீன்கள் தான். எனவே இந்த மீன்களை வாரத்திற்கு 2-3 முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. குறிப்பாக நெத்திலி, கானாங்கெளுத்தி, காட்டு சால்மன், மத்தி மற்றும் சூரை போன்ற மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக நிறைந்துள்ளது. அதோடு இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களானது வால்நட்ஸ், ஆளி விதை, ஆளி விதை எண்ணெய் மற்றும் கனோலா எண்ணெய்களிலும் அதிகம் உள்ளது.

ஒருவரது உடலில் போதுமான அளவு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இல்லாவிட்டால், அது குறிப்பிட்ட அறிகுறிகளை நமக்கு உணர்த்தும். இக்கட்டுரையில் அந்த அறிகுறிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து தெரிந்து, உங்களுக்கும் இந்த அறிகுறிகள் தென்பட்டால், உடனே மீன் சாப்பிடுவதை அதிகரித்துக் கொள்ளுங்கள்.
இதய பிரச்சனைகள்

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதய நோயை சரிசெய்ய அவசியமானதாகும். ஒருவரது டயட்டில் சாச்சுரேட்டட் கொழுப்புகள் குறைவாகவும், மோனோஅன்சாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகமாகவும் இருந்தால், அது இதய நோயைத் தடுக்கும். கொழுப்பு அமிலங்கள் இதய நோய், உயர் கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றின் அபாயத்தைக் குறைக்கும். ஆகவே இதய பிரச்சனைகள் இருப்பவர்கள் மற்றும் இதய நோய் வராமல் தடுக்க வேண்டுமானால், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்களை அடிக்கடி சாப்பிடுங்கள்.
மோசமான மனநிலை

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நினைவாற்றல் மற்றும் மனநிலை செயல்பாட்டிற்கு அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. இவை மூளையில் உள்ள செல் சவ்வுகளின் உருவாக்கத்திற்கு உதவி, மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்களை ஒருவர் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், அது கவன பற்றாக்குறை மற்றும் மோசமான கல்வி செயல்திறன் போன்றவற்றைத் தடுக்கலாம்.

மன இறுக்கம்

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், மன இறுக்கத்தைத் தடுக்கவும், பராமரிக்கவும் அவசியமாகும். ஒருவரது உடலில் இந்த நல்ல கொழுப்புக்கள் குறைவாக இருந்தால், அது மன இறுக்க அபாயத்தை அதிகரித்து, நிலைமையை மோசமாக்கும்.

பார்வை கோளாறுகள்

உங்களுக்கு பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏதேனும் திடீரென்று ஏற்பட்டால், உங்கள் உடலில் அத்தியாவசிய கொழுப்பு அமிலத்தில் குறைபாடு உள்ளது என்று அர்த்தம். இந்த கொழுப்பு அமிலங்கள் கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் கொழுப்பு மூலக்கூறுகளுக்கு முக்கியமானது. மேலும் இந்த கொழுப்பு அமிலங்கள், கண்களுக்கு கொடுக்கப்படும் அதிகப்படியான அழுத்தம் மற்றும் க்ளக்கோமா அபாயத்தைக் குறைக்கும்.

அழற்சி மற்றும் மூட்டு வலி

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடலில் குறைவாக இருந்தால், அது மூட்டுக்களில் அழற்சியை ஏற்படுத்தி, கடுமையான மூட்டு வலியை உண்டாக்கும். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகளாகவும் செயல்பட்டு, மூட்டுக்களில் ஏற்படும் வலி மற்றும் அழற்சியைக் குறைக்க உதவும்.

பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி

ஒருவரது உடலில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் குறைவாக இருந்தால், அது உடலின் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக்கி, அடிக்கடி சளி, தொற்றுகள் மற்றும் இதர ஆரோக்கிய பிரச்சனைகளை உண்டாக்கும். அதுவே போதுமான அளவு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இருப்பின், அது நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவி, நோயெதிர்ப்பு செல்களின் செயல்பாட்டை ஊக்குவிக்கும்.

 

 

 

 

 

 

 

உடல் பருமன்

ஒருவரது உடலில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் குறைவாக இருந்தால், அவர்கள் உடல் எடையைக் குறைக்க சிரமப்படுவார்கள். உண்மையை சொல்ல வேண்டுமானால், உங்கள் உடல் எடை அதிகமாக இருந்து, அதைக் குறைக்க முயற்சி செய்தால், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவை அதிகம் சாப்பிட்டு, கார்போஹைட்ரேட்டின் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள். உடலில் கார்போஹைட்ரேட் அளவு குறைவாக இருந்தால், அவர்களது உடல் ஆற்றலைப் பெறுவதற்கு, உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான கொழுப்புக்களைப் பயன்படுத்தும். இதன் விளைவாக உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உடல் எடை குறையும்.

சரும வறட்சி

உடலில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் குறைவாக இருந்தால், அது சருமத்தில் வறட்சியை அதிகரித்து, அரிப்பு அல்லது சருமத்தில் செதில்களை வரவழைக்கும். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து, சருமம் வறட்சி அடைவதைத் தடுக்கும். ஆகவே உங்களுக்கு சரும வறட்சி அதிகமாக இருந்தால், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள்.

ஆற்றல் குறைவு

உங்கள் உடலில் ஆற்றல் குறைவாக இருந்து, எந்நேரமும் உடல் சோர்வுடன் இருப்பதை உணர்ந்தால், உங்கள் உடலில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் குறைவாக உள்ளது என்று அர்த்தம். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆரோக்கியமான கொழுப்புக்கள் மற்றும் இவை மூளையின் செயல்பாடு மற்றும் உடலின் சரியான வளர்ச்சிக்கு தேவையானது. மேலும் இந்த கொழுப்புக்கள் தான் உடலுக்கு ஆற்றலை வழங்கி, உடலை சுறுசுறுப்புட செயல்படச் செய்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here