எலும்புகள் கடினமான கனிமப் பொருட்களால் உருவாகியிருந்தாலும், இவை உயிருள்ள மற்றும் வளரும் திசுக்களாகும். எலும்புகளாது இரண்டு பொருட்களால் ஆனது. அவை கொலாஜன் (புரோட்டீன்)
மற்றும் கால்சியம் (கனிமச்சத்து) ஆகும். எலும்புகள் உடலுக்கு வலிமை, நிலைத்தன்மை மற்றும் ஆதரவு வழங்குவதோடு, உள்ளுறுப்புக்களுக்கு பாதுகாப்பு மற்றும் தசைகளுக்கு ஆதரவு போன்றவற்றை வழங்கும். எலும்புகள் ஆரோக்கியமாக இருந்தால், அது ஒருவரது தோற்றத்தை பல வருடங்கள் சிறப்பாக வைத்திருக்கும்.
ஒருவரது எலும்புகள் வலிமையுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க, நல்ல டயட்டை மேற்கொள்ள வேண்டும். அதுவும் கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் டி, வைட்டமின் கே, பீட்டா-கரோட்டீன் மற்றும் புரோட்டீன் நிறைந்த டயட்டை மேற்கொள்ள வேண்டும். அதோடு அன்றாடம் தவறாமல் உடற்பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம். எலும்புகளின் வலிமைக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்படத் தேவையான ஆற்றலானது ஜூஸ்களின் மூலம் கிடைக்கும். அதுவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஜூஸை தினமும் காலை உணவின் போது குடிப்பது மிகவும் நல்லது. சரி, இப்போது எலும்புகளின் வலிமையை அதிகரித்து, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கும் அற்புத ஜூஸ் குறித்துக் காண்போம்.
ஜூஸ் தயாரிக்கத் தேவையான பொருட்கள்: * பசலைக்கீரை – 1 1/2 கப் * ஆரஞ்சு ஜூஸ் – 1/2 கப் * வெள்ளரிக்காய் – 1 * பச்சை ஆப்பிள் – 2 * இஞ்சி – 1 துண்டு
பசலைக்கீரை பசலைக்கீரையில் எலும்புகளின் ஆரோக்கியத்திற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக நிரம்பியுள்ளது. இதில் வைட்டமின் கே அதிகம் உள்ளது. அதுவும் ஒரு கப் பசலைக்கீரையில் 181 சதவீதம் வைட்டமின் கே அடங்கியுள்ளது. இந்த வைட்டமின் எலும்புகளை அழிக்கும் அதிகப்படியான எலும்புறிஞ்சி செல்களைத் தடுக்க உதவும். மேலும் இந்த கீரையில் கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களும் உள்ளன.
ஆரஞ்சு ஜூஸ்
ஆரஞ்சு ஜூஸில் வைட்டமின் டி அதிகம் உள்ளது. இது தசைகள் மற்றும் எலும்புகளுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்தாகும். வைட்டமின் டி சத்தானது எலும்புகளின் வலிமையைப் பராமரிக்கத் தேவையான கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவும். இந்த வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால், அது எலும்புகளை மெலிதாக்கி, எலும்புகளை எளிதில் முறியச் செய்யும். ஆகவே அடிக்கடி ஆரஞ்சு ஜூஸ் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். இதனால் ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து மட்டுமின்றி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்றவைகளும் ஏராளமாக உள்ளது. வெள்ளரிக்காயை சாப்பிட்டால், அது உடல் வறட்சியைத் தடுப்பதோடு, எலும்புகளின் வலிமைக்கும் உதவிப் புரியும். வெள்ளரிக்காயில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின் சி, உணவுகளை க்ளுக்கோஸாக மாற்றி, உடலுக்கு ஆற்றலை வழங்கும். வெள்ளரிக்காய் இயற்கையாகவே அதிக காரத்தன்மை கொண்டது மற்றும் இது உடலில் அமிலத்தன்மையைப் சீராக வைத்துக் கொள்ள உதவும். இதில் உள்ள சிலிகா, இணைப்புத்திசுக்களின் வளர்ச்சி மற்றும் வலிமைக்கு உதவும். வெள்ளரிக்காயை ஆரஞ்சு ஜூஸ் உடன் சேர்த்து எடுக்கும் போது, யூரிக் அமிலத்தின் அளவு குறைய உதவி, கீல்வாதம் அல்லது ஆர்த்ரிடிஸ் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
பச்சை ஆப்பிளில் எலும்புகளுக்கு ஆதரவாக இருக்கும் ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளது. பச்சை ஆப்பிளில் உள்ள ப்ளோரிட்ஜின் என்னும் ப்ளேவோனாய்டு, ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைத்து, எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கும். அதோடு கொலாஜன் உற்பத்திக்கு வைட்டமின் சி அத்தியாவசியமானது. இந்த கொலாஜனானது தசைகள், இரத்த நாளங்கள், எலும்புகள், தசைநார்கள் போன்றவற்றைப் பராமரிக்க தேவையானதாகும். மேலும் ஆப்பிளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும அழற்சி எதிர்ப்பு பண்புகள், எலும்புகளின் அடர்த்தி மற்றும் வலிமையை மேம்படுத்த உதவும்.
இஞ்சி இஞ்சியும் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் மூட்டு வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். இதில் உள்ள தனித்துவமான உட்பொருளான ஜின்ஜெரால் என்னும் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள், எலும்பு மூட்டுக்களில் ஏற்படும் அழற்சியைத் தடுத்து, எலும்பு மூட்டுக்களின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும்.
ஜூஸ் தயாரிக்கும் முறை: * பச்சை ஆப்பிளை சிறு துண்டுகளாக நறுக்கி, ஜூஸரில் போட்டு சாறு எடுத்துக் கொள்ளுங்கள். * பின் பசலைக்கீரையின் தண்டுகளை நீக்கிவிட்டு, அந்த இலையை மட்டும் போட்டு சாறு எடுங்கள். * அதன் பின் வெள்ளரிக்காயை துண்டுகளாக்கிப் போட்டு சாறு எடுத்துக் கொள்ளுங்கள். * பின்பு இஞ்சியின் தோலை நீக்கிவிட்டு, ஜூஸரில் போட்டு சாறு எடுத்துக் கொள்ளுங்கள். * பிறகு அந்த ஜூஸை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அத்துடன் ஆரஞ்சு ஜூஸை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். * இறுதியில் அத்துடன் சிறிது ஐஸ் கட்டிகளை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். * இந்த ஜூஸை தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள்.
டிப்ஸ் #1
பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டு ஜூஸ் தயாரிக்கும் முன், அவற்றை குழாய் நீரில் நன்கு கழுவிக் கொள்ளுங்கள். இதனால் அவற்றில் உள்ள பூச்சிக்கொல்லிகள் மற்றும் இதர நச்சுப் பொருட்கள் நீங்கிவிடும்.
டிப்ஸ் #2 பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டு ஜூஸ் தயாரிப்பதாக இருந்தால், அந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆர்கானிக் அதாவது இயற்கை உரம் பயன்படுத்தி வளர்க்கப்பட்டதாக இருப்பது மிகவும் நல்லது.
டிப்ஸ் #3 நீங்கள் குடிக்கும் நேச்சுரல் ஜூஸின் சுவையை மேம்படுத்த நினைத்தால், அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இதனால் அந்த ஜூஸில் இருக்கும் ஊட்டச்சத்துக்களின் அளவு இன்னும் அதிகரித்து, ஊட்டச்சத்து நிறைந்த பானமாக இருக்கும்.